
நெல்லை,
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சின்னத்துரை. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்தபோது சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு தாக்குதலுக்கு ஆளான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
தற்போது கல்லூரியில் படித்து வரும் அவர், மீண்டும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். இன்ஸ்டாகிராம் செயலி மூலம் அறிமுகமான நபர் ஒருவர், தங்களுக்கு திருமண அழைப்பிதழ் தரவேண்டும் என கூறி சின்னத்துரையை தனி இடத்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.
அதனை நம்பிச் சென்ற சின்னதுரையை, 4 பேர் கொண்ட கும்பல் பணம் கேட்டுத் தாக்கியதாகவும் பணம் இல்லாத நிலையில், செல்போனை பறித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த சின்னத்துரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சின்னதுரை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சங்கரநாராயணன் மற்றும் சக்திவேல் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக பழகி, பணம் பறிக்கும் நோக்கில் சின்னதுரையை வரவழைத்து தாக்கியதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.