மாஞ்சோலையில் சாலையில் ஓய்வெடுத்த 18 அடி நீள ராஜநாகம்

3 months ago 10

நெல்லை : மாஞ்சோலை மின்வாரிய அலுவலகம் அருகே சாலையோரம் 18 அடி நீள ராஜநாகம் ஓய்வெடுத்தது. இதை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் அதிகம் கூடியதால் காட்டிற்குள் விரைந்து சென்றது.பெரும்பாலும் ராஜநாகங்கள் மழைக்காடுகளில் வாழ்கின்ற பாம்பாக அறியப்படுகிறது.

ஆனால் சமீப காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களிலும் இவைகளின் வருகை அதிகரித்துள்ளது. மாஞ்சோலை மின்வாரிய அலுவலகம் அருகே நேற்று எதையும் பொருட்படுத்தாமல் ராஜநாகம் ஒன்று அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அது யாரையும் மிரட்டுவதற்கோ, துரத்துவதற்கோ முற்படவில்லை. அதே நேரம் அந்த இடத்தை விட்டு நகரவும் முற்படவில்லை.

ராஜநாகம் குறித்து நெல்லை மாவட்டம், காரையாறு பகுதியில் வசிக்கும் காணி இனத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:நாங்கள் ராஜநாகத்தை ‘கருஞ்சாத்தி’ என்று அழைக்கிறோம். நாங்கள் இதன் கூட்டை பல முறை பார்த்துள்ளோம் .

இந்தக் கூடு பறவைகளின் கூடு போன்று அல்ல. மிக இறுக்கமாக இருக்கும். காட்டுத் தீ ஏற்பட்டால் கூட அதைத் தாங்கும் வலிமையில் அந்தக் கூடு வேயப்பட்டிருக்கும். கூட்டில் கருஞ்சாத்தி இருக்கும்போது தலையை சற்று உயர்த்திக் கொண்டு இருக்கும். ஆனால் நாம் அதைப் பார்க்க அருகில் சென்றால் கண்ணிமைக்கும் நேரத்தில் நம்மை நோக்கி சீறிப் பாய்ந்து விரட்டும். கூடு வைத்திருக்கும் காலங்களில் மட்டும் தான் பாதுகாப்பு கருதி கருஞ்சாத்தி ஆட்களை விரட்ட முற்படுகிறது. மற்ற காலங்களில் மிகவும் சாதுவாக இருக்கும்.

ராஜநாகங்கள் கூடமைத்து, முட்டையிட்டு அதிலிருந்து குட்டிகள் வெளிவரும் வரை பெண் பாம்பு அங்கிருந்து முழு பாதுகாப்பையும், பராமரிப்பையும் வழங்குகிறது. பொதுவாக பெற்றோர் பாதுகாப்பு முறை வேறு எந்த ஊர்வன வகை விலங்கிடமும் இல்லாத நிலையில், இதுபோன்ற கூடமைத்து பராமரிக்கும் முறை ராஜநாகத்திடம் மட்டுமே காணப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மாஞ்சோலை மின்வாரிய அலுவலகம் அருகே ராஜநாகம் இருப்பதை கேள்விப்பட்டு ஏராளமான பொதுமக்கள் அதை வேடிக்கை பார்க்க வந்தனர். பாம்பு இருக்கும் இடத்திலிருந்து 100 மீட்டர் தூரத்திலிருந்து செல்போனில் படம் பிடித்த பொதுமக்களின் சத்தத்தை உணர்ந்த அந்த பாம்பு, காட்டுக்குள் விரைந்து சென்று விட்டது.

The post மாஞ்சோலையில் சாலையில் ஓய்வெடுத்த 18 அடி நீள ராஜநாகம் appeared first on Dinakaran.

Read Entire Article