
நெல்லை,
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. அங்கு பணியாற்றிய தொழிலாளர்களுக்கு தேயிலை தோட்ட நிறுவனம் விருப்ப ஓய்வு அளித்ததால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கல்லிடைக்குறிச்சியில் இருந்து மணிமுத்தாறு, மாஞ்சோலை வழியாக ஊத்து பகுதிக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பஸ்சில் பயணித்தனர். மாஞ்சோலை பகுதியில் பஸ் சென்றபோது, சாலையின் நடுவில் ஒற்றை யானை நின்று கொண்டிருந்தது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர். எனினும் அந்த யானை பஸ்சை நோக்கி வராமல், பஸ்சின் முன்புறமாக சாலையில் மெதுவாக நடந்து சென்றது.
சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு ஒய்யாரமாக நடந்து சென்ற யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் புகுந்து மறைந்தது. இதனால் பயணிகள் நிம்மதியடைந்தனர். சாலையின் நடுவில் நின்ற யானை, பஸ்சின் முன்பாக நடந்து சென்றதை பயணிகள் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.