மாஜி அரசு அதிகாரி பாண்டியன் வீட்டில் 2வது நாளாக சோதனை: முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

1 day ago 3

சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய கண்காணிப்பாளராக பணியாற்றியவர் பாண்டியன். வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2021ம் ஆண்டு இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1.37 கோடி ரொக்கம், 3 கிலோ தங்கம், வைரம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தானாக முன்வந்து பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர் தனது பணிக்காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிப்பதற்கு பல கோடி ரூபாய் வரை பணம் சட்டவிரோதமாக வாங்கியது உறுதியானது.

அதனை தொடர்ந்து முன்னாள் மாசுகட்டுப்பாடு வாரிய கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் நேற்று முன்தினம் முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பாண்டியன் அவரது பணிக்காலத்தில் சற்றுச்சூழல் அனுமதி பெற சட்டவிராதமாக பணம் பரிமாற்றம் செய்த தனியார் நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.

குறிப்பாக, கே.கே.நகர் டாக்டர் ராமசாமி சாலையில் உள்ள மருத்துவர் வரதராஜன் வீடு, சைதாப்பேட்டை ஸ்ரீராம் காலனி மாட தெருவில் ‘என்சைஸ் டெக்னாலஜி என்ற தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஏ.கே.நாதன் (எ) அலங்கநாதன் வீடு, அசோக் நகரில் என்சிஸ் டெக்னாலஜி நிறுவனம் மற்றும் பில்ரோத் நர்சிங் கல்லூரி முதல்வர் வீடுகளில் 2வது நாளாக நேற்றும் சோதனை நடந்தது. கோயம்பேடு ஜெயநகர் 8வது தெருவில் உள்ள ‘எனோ கேர் இன்ஜினியரிங்’ என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநர் குணசேகரன் அலுவலகத்தில் நேற்று காலை சோதனை நிறைவடைந்தது. 2வது நாளாக நடந்து வரும் சோதனையில் சட்டவிரோத பணம் பரிமாற்றம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் பல சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

The post மாஜி அரசு அதிகாரி பாண்டியன் வீட்டில் 2வது நாளாக சோதனை: முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article