ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி ஜீவ சமாதியான மந்திராலயத்தின் அருகில் அதோனி என்னும் கிராமம் இருக்கிறது. இங்கு,ஸ்ரீ மங்கராய ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. மங்கராய அனுமனை பற்றி நாம் பல தகவல்களை இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்.
அதோனியில் தாஸர்கள்
நாம் ஏற்கனவே பல தொகுப்பில் தெரிவித்ததை போல், ஸ்ரீ மத்வாச்சாரியாரின் முந்தைய அவதாரம் பீமன் எனவும், பீமனின் முந்தைய அவதாரம் அனுமன் என்றும் துவைத சித்தாந்தம் தெரிவிக்கிறது. ஆக, அனுமா, பீமா, மத்வா என வரிசைப்படுத்துகிறது துவைதம். ஆந்திர மாநிலம், அதோனியில் பல ஆண்டு காலம் ஸ்ரீ வியாசராஜர் போன்ற மகான்கள் வாழ்ந்த ஒரு மாபெரும் புண்ணிய தலமாகும். மேலும், வசிஷ்ட மகரிஷி, காசியபமகரிஷி போன்ற மா தவம் செய்திருந்த முனிவர்களும் இங்கு சில காலம் வாழ்ந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. அது மட்டுமா! மகா கவிஞரும், சந்நியாசியுமான ஸ்ரீ விஜயதாசர் ஏழு ஆண்டுகள் இந்த அதோனி இடத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தை கடைபிடித்திருக்கிறார். புரந்தரதாஸரை போல் விஜயதாசரும் பல கன்னட கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். சாதுர்மாஸ்ய விரதம் என்பது கடும் உணவு கட்டுப்பாடுக் கொண்ட விரதமாகும். இந்த விரதம், தேவஷயன் ஏகாதசிக்குப் பிறகு (ஜூன் – ஜூலை) தொடங்கி, பிரபோதினி ஏகாதசி (அக்டோபர் – நவம்பர்) வரை நான்கு மாதங்கள் கடைப்பிடிக்கப்படும்.
ராமஜலம்
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பதார்த்தங்களை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. உதாரணமாக; ஒரு மாதம் பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அடுத்த மாதம், காய் வகைகளை சேர்த்துக் கொள்ள கூடாது. ஒரு மாதம் பால் வகை, அடுத்த மாதம் தயிர் இப்படி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு உணவு வகையினை உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது. மிக கடும் விரதமுறையாகும். இன்றும் துவைத சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள், இந்த சாதுர்மாஸ்ய விரதத்தை கடைபிடித்து வருகிறார்கள்.ராமபிரானின் வனவாசத்தின் போது, அவரது அம்புகளால் `ராமஜலம்’ என்ற அருவியை ராமர் இந்த அதோனியில் உருவாக்கியதாக கூறப்படுகிறது.
கோயிலைகட்டிய பேரரசர்
அதே போல், விஜய நகர பேரரசர் கிருஷ்ணதேவராயரின் மூத்த மருமகனான ராமராயர் என்பவர், இந்த மங்கராய ஆஞ்சநேயர் கோயிலின் மண்டபத்தையும், ராஜகோபுரத்தையும் கட்டியதாக புராணங்கள் கூறுகின்றன. மேலும், விஜயநகரப் பேரரசின் அரச சின்னமான இரண்டு தலை கருடனை, இங்குள்ள துவஜஸ்தம்பத்தில் பொறிக்கப்பட்டு, கந்தத்தால் ஆன பெரிய உருண்டை அதன் மீது அலங்கரிக்கப்பட்டுள்ளது. சுமார் 1746 – ஆம் ஆண்டுகளில், மங்கராயர் கோயிலுக்குப் பின்னால் `வஜ்ராஞ்சநேயர்’ என்ற கோயில் இருந்தது. (காலப் போக்கில் தற்போது இல்லை) இங்குதான் கணபதியின் மறு அவதாரமான பாகன்னதாசர் என்று சொல்லக் கூடிய கோபாலதாஸர், `ஸ்ரீ கோபாலவிட்டலா’ என்று தனது அங்கிதத்தைப் பெற்றார்.
ஆயுளை கொடுத்த தாஸர்
அதாவது, ஸ்ரீ விஜயதாசர் பல கன்னட கீர்த்தனைகளை எழுதிக் கொண்டே வந்தார். இன்னும் சில கீர்த்தனைகளை எழுத வேண்டியிருந்தது. அதற்குள், விஜயதாசரின் ஆயுள் காலம் முடிவடையும் நிலை ஏற்பட்டது. இதனை அறிந்து, தனது தவ வலிமையால், தன் ஆயுளின் ஒரு பாகத்தை எடுத்த கோபாலதாஸர், விஜயதாஸருக்கு வழங்குகிறார். இதனால், விஜயதாசர் இன்னும் பல ஆண்டு காலம் உயிர் வாழ்ந்து, பல கீர்த்தனைகளை எழுதுகிறார். அந்த சமயத்தில், கோபாலதாசரும் பல கன்னட கீர்த்தனைகளை இயற்றுகிறார், அப்போது அவரது கீர்த்தனைகள் அனைத்திலும் முத்திரிக்கை என்று சொல்லக் கூடிய கடைசி வரிகளில், ஸ்ரீ கோபாலவிட்டலா என்று வரும். அதே போல், புரந்தரதாசரின் முத்திரிக்கையில் புரந்தரவிட்டாலா என்று முடியும். இப்படி, ஸ்ரீ விஜயதாசருக்கும்,ஸ்ரீ கோபாலதாசருக்கும் பல அற்புத நிகழ்வுகள் நடைபெற்ற இடம், இந்த அதோனி திருத்தலமாகும். இவைகள் அனைத்தும் ஸ்ரீ மங்கராய ஆஞ்சநேயர் கோயிலில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் கூறுகின்றது.
தெற்கு நோக்கிய முதுகு
மிக முக்கியமாக, ஸ்ரீ மங்கராய ஆஞ்சநேயரை, தர்க்கதாண்டவம், நியாயம்ரிதம் மற்றும் தத்பர்யசந்திரிகா போன்ற சிறந்த நூல்களின் ஆசிரியரான குரு வியாசராஜரால் நிறுவப்பட்டது. அவரால், பிரதிஷ்டை செய்யப்பட அனைத்து அனுமன்களும் மிக கம்பீரமான தோற்றம் கொண்டவைகளாக இருக்கும். அதே போல், இந்த ஸ்ரீ மங்கராய ஆஞ்சநேயரும் கம்பீரமாக காட்சியளிக்கிறார். மங்கராய அனுமனின் கைகளில் சங்கு, சக்கரம் ஆகியவை காணப்படுகிறது. எப்பவும் போல், வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனின் வாலில் மணியிருக்கும். இவருக்கும் வாலில் ஒரு மணி கட்டப்பட்டிருக்கிறது. மங்கராய ஆஞ்சநேயர், இடது கையில் கதாயுதத்தை ஏந்தி, தெற்கு நோக்கி முதுகு இருப்பதால், தெற்கு திசையிலிருந்து வரும் அனைத்து தீய விளைவுகளையும், நோய்களையும் தடுத்து பக்தர்களை காத்து அருள்கிறார்.
`ஸ்ரீ மங்கராய’ என்ற இந்த அனுமனை வழிபடும் பக்தர்கள், அனைத்து தீய விளைவுகளிலிருந்தும் விடுபடுவார்கள் என்பது ஒரு உறுதியான நம்பிக்கை. மேலும், நீண்ட நாட்களாக திருமணமாகாதவர்கள், இங்கு வந்து வேண்டிக் கொண்டால் மிக விரைவாக திருமணம் நடைபெறும். ஜெய் மங்கராய! தொடர்புக்கு: 08512-252505.
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 5.30 முதல் 1.00 வரையிலும், மாலை 5.30 முதல் 8.00 வரை.கோயில் அமைவிடம்: ஆந்திர மாநிலம், மந்திராலயத்தில் இருந்து 49 கி.மீ., பயணித்தால் இத்திருத்தலத்தை அடைந்துவிடலாம்.
ரா.ரெங்கராஜன்
The post மாசற்ற வாழ்வு தருவார் மங்கராய! appeared first on Dinakaran.