மாங்குடியில் துணை சுகாதார நிலையம் துவங்க வேண்டும்

3 months ago 19

 

திருவாரூர், அக். 15: திருவாரூர் ஒன்றியம் மாங்குடியில் துணை சுகாதார நிலைய கட்டுமான பணிகளை துவங்கிட வேண்டுமென கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருவாரூர் ஊராட்சி ஒன்றியம் மாங்குடி ஊராட்சி அகர சாத்தங்குடிகிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் மாங்குடி பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு துணை சுகாதார நிலைய கட்டுமான பணி துவங்கி நடைபெற்ற நிலையில்இந்த சுகாதார நிலையத்தினை மாற்று இடத்தில் கட்ட வேண்டும் என்ற ஒரு சிலர் கோரிக்கையின் பேரில் கட்டுமான பணி என்பது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாங்குடியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இருந்து வரும் கொட்டாரக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இப்பகுதி கிராம மக்கள் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் போது உரிய பேருந்து வசதி இல்லாததினால் ஆட்டோவிற்கு ரூ.500 வரையில் கொடுக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே ஏழை, எளிய பொதுமக்களின் நலன் கருதி ஏற்கனவே துவங்கிய இடத்திலேயே துணை சுகாதார நிலைய கட்டுமான பணியினை விரைந்து முடித்திட வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post மாங்குடியில் துணை சுகாதார நிலையம் துவங்க வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article