‘‘ஒற்றை தலைமைக்காக கையில் கொடுத்த பிஸ்கட்டை வைத்தே வாக்கெடுப்பு நடத்தலாம் என அப்போதே ஐடியா கொடுத்த மாஜி உளறல் அமைச்சரின் பேச்சுதான் செயல்வீரர் கூட்டத்தையே கலகலப்பாக்கி விட்டதாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘தீப்பெட்டிக்கு பெயர்போன நகரில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்திருக்கு.. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பூட்டு மாவட்ட மாஜி உளறல் அமைச்சரின் பேச்சுதான் கட்சிக்காரர்கள் வட்டாரத்தில் கலகலப்பை ஏற்படுத்தியதாம்.. ‘அதிமுகவிற்கும் 20 ரூபாய் நோட்டுக்காரருக்கும் என்ன சம்பந்தம்? ஜெயலலிதாவிற்கு உதவியாளராக சசிகலா வந்த பிறகுதான் இவர்களெல்லாம் உள்ளே வந்தாங்க.. காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதை போல இவர்களை பார்த்தால் தான் ஜெயலலிதாவை பார்க்க முடியும், சட்டமன்ற உறுப்பினராக முடியும், அமைச்சராக முடியும் என்ற நிலையை உருவாக்கி, தமிழகம் முழுவதும் தவறான வழியில் சொத்து சேர்த்தாங்க… இதை தவிர இவர்களுக்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 20 ரூபாய் நோட்டுக்காரர் மூலமாக முதல்வரானவர் தேனிக்காரர்.. 11 எம்.எல்.ஏ.,க்களை வைத்து அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர்தான் அவர். அதிமுகவின் அணிகள் இணைப்பு என்பதோ, தேனிக்காரருக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்ததோ எங்களுக்கு தெரியாது. ஒருங்கிணைப்பாளராக பதவியேற்ற 3 மாதத்தில் அவர் தனது சுயரூபத்தை காட்டினார். இதை தொடர்ந்து கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும்னு நிர்வாகிகள் அனைவரும் முடிவு எடுத்தாங்க.. அப்போது நான், கூட்டத்தில் நமக்கு வழங்கிய பிஸ்கட் கையில் உள்ளது. ரெண்டு ஹார்லிக்ஸ் பாட்டில் கொண்டு வாருங்கள். அதில் சேலம், தேனிக்காரர்கள் பெயரை எழுதி விடுவோம். ஒவ்வொருவரும் அதில் ஒரு பிஸ்கட்டை போடுவோம். இதையே வாக்கெடுப்பாக நடத்தி ஒற்றை தலைமை யாரு என முடிவு எடுத்து விடலாம்னு கூறினேன். அதை தேனிக்காரர் அப்போது ஏற்காததால்தான் பிற கூட்டம் நடத்தி ஒற்றை தலைமையை உறுதி செய்தோம் என பேசினாராம்.. சாதா பிஸ்கட்டை வைத்தே அண்ணன் ஒரு பெரிய தீர்மானத்தை எடுக்க திட்டமிட்டாரே… கில்லாடிதான் போங்க என குரல் கொடுத்தபடியே கட்சியினர் கலைந்து சென்றனராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சியில் மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க காய்நகர்த்தும் மாஜி அமைச்சர்பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் தேனிக்காரர் அணியில் இருந்து விலகி சேலத்துக்காரர் அணியில் இணைந்தால் இலை கட்சியில் மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என்கிற ஆசையில் பெயரின் பின்பாதியில் பந்தை வைத்திருக்கும் மற்றொரு மாஜி அமைச்சர் இணைந்தாராம்.. ஆனால், இணைந்து பல மாதங்களாகியும் எதிர்பார்த்த மாவட்ட செயலாளர் பதவி இதுவரை கிடைக்க வில்லையாம்.. இதனால் மாஜி அமைச்சரின் ஆதரவாளர்கள் கடும் அப்செட்டில் இருந்து வருகிறார்களாம்… கடலோர மாவட்டத்தில் சேலத்துக்காரர் அணியில் உள்ள மாஜி அமைச்சரான மணியானவரே மாவட்ட செலயாளராக நீடிப்பதால், மற்றொரு மாஜியானவர் என்ன செய்வதென்று தெரியாமலும், தன்னை நம்பி வந்த ஆதரவாளர்களுக்கு பதில் சொல்ல முடியாமலும் தவிப்பில் இருந்து வருகிறாராம்.. இப்படியே சென்றால் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும்னு நினைத்த அந்த மாஜி அமைச்சர், தனக்கு வேண்டியவர்கள் மூலம் தலைமையிடத்தில் காய் நகர்த்தி வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பொதுக்கூட்ட மேடையில் ஆவேசமாக பேச்சை தொடங்கிய இலைக்கட்சி எம்எல்ஏ திடீர்னு கப்சிப் ஆன மர்மம் என்னவாம்..’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடலுக்குள் தூக்குப்பாலம் அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள குளத்தூர் பகுதியில் இலைக்கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடந்ததாம்.. இதில், சிறப்பு பேச்சாளராக முதல்படை வீடு தொகுதியின் எம்எல்ஏவான செல்லமானவர் கலந்துகொண்டு பேசினாராம்.. ஒரு கட்டத்தில் அதிரடியாய் பேச ஆரம்பித்தவர், கட்சியிலிருந்து நீக்கியவர்களை ஒருபோதும் மீண்டும் சேர்க்க முடியாதுன்னு படு ஆவேசமாக பேசினாராம்.. அப்போது மேடையில் இருந்து சில நிர்வாகிகள் விறுவிறுவென எழுந்து சென்று பேசிக் கொண்டிருந்த செல்லமானவரை இடைமறித்து, அவரது காதில் ஏதோ கிசுகிசுத்து விட்டு உட்கார்ந்தனராம்.. இதன்பிறகு தனது பேச்சை முடிக்கும் வரை ஒரு இடத்தில் கூட தப்பி தவறியும் சின்ன மம்மி, பலாப்பழக்காரர் குறித்து செல்லமானவர் மூச்சு விடவில்லையாம்.. செல்லம் ஏன் திடீரென கப்சிப் ஆனார், அவரது காதில் அப்படி என்ன கிசுகிசுக்கப்பட்டது என்பது, கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் பெரும் மர்மமாக நீடிக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சங்கம் பெயரை சொல்லி, வேலைக்கு வராத அரசு ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல அரசின் திட்டங்கள் குக்கிராமங்களில் உள்ள கடைகோடி மக்கள் வரைக்கும் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துல, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருது.. மேல் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் எல்லாம் வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.. ஆனா அவங்களுக்கு கீழ இருக்குற ஒரு சில அரசு ஊழியருங்க ஆண்டு கணக்குல வேலைக்கு செல்லாம, சம்பளம் மட்டும் சரியாக வாங்கிக்குறதா புகார்கள் எழுந்த வண்ணம் இருக்குது.. நாங்கள் சங்கங்கள்ல முக்கிய பொறுப்புல இருக்குறோம்.. சங்க வேலையாக செல்ல வேண்டும் என கூறிவிட்டு சீட்டில் கூட உட்காருவது இல்லையாம்.. ஏதாவது ஒரு அதிகாரி கேள்வி கேட்டா? அவங்களுக்கு எதிராவே கொடி பிடிக்க ஆரம்பிச்சுடுறாங்களாம்.. இதனால வர்ற அதிகாரிகளும் நமக்கு ஏன் வம்புன்னு, கண்டும் காணாமல் இருந்து வர்றாங்களாம்.. அரசு சம்பளம் வாங்கிக் கொண்டு பெயரளவுக்கு கூட வேலை செய்வது இல்லை என்றால் இவர்களை என்னதான் செய்வது, இவர்களுக்கு யார் தான் மணிகட்டுவது என்ற குற்றச்சாட்டுகள் சக ஊழியர்கள் மத்தியில இருந்தே எழுந்திருக்குது.. ஒரு சிலர் மட்டும் இப்படி ஊர் சுத்தி வந்து கெட்ட பெயர் ஏற்படுத்துறதாகவும் சொல்லிக்குறாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
The post மா.செ. பதவி பிடிக்க காய் நகர்த்தும் மாஜி மந்திரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.