மவுனம் கலையுமா?

2 weeks ago 4

தமிழ்நாடு, இலங்கை மீனவர்கள் பிரச்னை என்பது ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இலங்கை கடற்படையினர் தாக்குதலால் நூற்றுக்கணக்கான தமிழ்நாட்டு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மீனவர்கள் உடல் ஊனப்படுத்தப்பட்டும், பலர் படகுகளை இழந்து தங்களது வாழ்வாதாரத்தை பறிகொடுத்தும் உள்ளனர். மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி பகுதிகளில் தொன்றுதொட்டு இருநாட்டு மீனவர்களும் மீன் பிடித்து வந்த நிலையில் சமீபகாலமாக இந்த பகுதிதான் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடக்கும் பகுதியாக மாறி உள்ளது.

கைது செய்யப்படும் தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை நாட்டுடமையாக்குதல், மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதித்தல், அபராதத்தை கட்டத் தவறினால் சிறை தண்டனை விதிப்பது அல்லது அபராதத்தையும், சிறை தண்டனையும் ஒரு சேர விதிப்பது என இலங்கை அரசு வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டங்களை கடுமையாக அமல்படுத்தி வருகின்றன. தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, சிறைபிடிப்பது, படகுகளை கைப்பற்றுவது, வலைகளை அறுப்பது போன்ற அத்துமீறல்களில் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

எனவே வெளிநாட்டு மீன்பிடி சட்டத்தை திரும்ப பெறக் கோரியும், மீனவர்களுக்கு அபராதம், சிறை தண்டனை வழங்குவதை கண்டித்தும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகள், மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும் ஒன்றிய அரசை வலியுறுத்தி வரும் தமிழ்நாடு மீனவர்கள், இலங்கை கடற்படையினரை கண்டித்து போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரை 10 மாதங்களில் இலங்கை கடற்படையினர் 62 தமிழ்நாட்டு மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்து, 462 மீனவர்களை கைது செய்துள்ளனர்.

இந்தப் பிரச்னைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிய அரசானது ஆக்கபூர்வமான திட்டங்கள் எதையும் முன்னெடுக்கவில்லை என்பதே தமிழ்நாடு மீனவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாகவும், இதை தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்கக்கோரியும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார். ஒவ்வொரு முறையும் பிரதமரை சந்திக்கும் போதும், தமிழ்நாடு மீனவர்கள் பிரச்னை குறித்து வலியுறுத்த முதல்வர் தவறியதில்லை.

ஆனாலும் தமிழ்நாடு மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணாமலும், உறுதியான நடவடிக்கை எடுக்காமலும் ஒன்றிய அரசு மவுனம் காத்து வருவது மீனவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில்தான் இருநாட்டு மீனவர்கள் கூட்டத்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காணுவது தொடர்பாக சமீபத்தில் இலங்கை அதிபர் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த கூட்டத்தில் இந்தியா, இலங்கை இரு நாட்டு மீனவர்களின் நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் தேவை குறித்தும் விரிவாக பேசப்பட்டுள்ளது.

இருநாட்டு மீனவர் சங்க பிரதிநிதிகளையும் அழைத்து பேசினால் பிரச்னைக்கு சுமூகமான தீர்வு எட்டப்பட வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு மீனவர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனவே இருநாட்டு மீனவர்கள் சந்திக்கும் ஆலோசனை கூட்டத்தை துரிதப்படுத்தவும், கூட்டத்தை நடத்த தேவையான ஏற்பாடுகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது தமிழ்நாட்டு மீனவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. வழக்கம்போல ஒன்றிய அரசு மவுனம் காக்குமா? அல்லது தீர்வை நோக்கி அடியெடுத்து வைக்குமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

The post மவுனம் கலையுமா? appeared first on Dinakaran.

Read Entire Article