‘’மழையில் அடித்துச்செல்லப்படும் குப்பைகள்’’ எச்.ராஜாவுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

2 weeks ago 4

பெரம்பூர்: வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை எழும்பூர் தொகுதி, சூளை, இராட்லர் தெருவில் உள்ள கிளை நூலகம், திருவிக.நகர் தொகுதி, புளியந்தோப்பு, வெங்கடேசபுரம் புதிய காலனி கிளை நூலகம்,ராயபுரம் தொகுதி, புதிய வண்ணாரபேட்டை, மொட்டை தோட்டம், சிந்தனை சிற்பி சிங்காரவேலர் கிளை நூலகம் ஆர்.கே. நகர் தொகுதி, பழைய வண்ணாரப்பேட்டை, மேயர் பாசுதேவ் தெரு கிளை நூலகம், புதிய வண்ணாரப்பேட்டை, ஜீவா நகர் நூலகம், பெரம்பூர் தொகுதி, கொடுங்கையூர், எருக்கஞ்சேரி நூலகம், துறைமுகம் தொகுதி, ஜார்ஜ் டவுன், சண்முகம் தெரு கிளை நூலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

இதன்பின்னர் அமைச்சர் அளித்த பேட்டி; ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம் என்று அனைத்து நூலகங்களையும் டிசம்பர் 25ம் ஆண்டிற்குள் கட்டி முடிப்பதற்கும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த மாத இறுதிக்குள் முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் மக்களுடைய பயன்பாட்டிற்கு வரும். இந்துசமய அறநிலையத்துறை சார்பில், மாணவர்கள் பங்கேற்ற கந்தசஷ்டி பாராயணம் தொடங்கி வைத்தது விமர்சனத்திற்கு உள்ளானது குறித்த கேட்டதற்கு, ‘’கந்தசஷ்டி கவசம் கேட்பவர்களும் பொதுமக்கள்தான். எனவே வசைபாடுபவர்களை பற்றி எங்களுக்கு கவலை கிடையாது. மக்கள் நலனுக்கு எவை உகந்ததோ அதை செய்து கொண்டிருக்கிறோம். இந்த ஆட்சியை வசைப்பாடுபவர்களை பற்றி கவலைப்படாது. வசை பாடுபவர்களும் வாழ்த்துகின்ற அளவிற்கு எங்களுடைய மக்கள் பணி, முதல்வரால் நடந்து கொண்டிருக்கிறது.

தஞ்சாவூருக்கு செல்லும் துணை முதல்வர் உதயநிதியை வரவேற்க கோயில் பணம் செலவிடப்படுகிறது என்ற எச்.ராஜா கூறியுள்ளாரோ என்று கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தபோது, ‘’எச்.ராஜா காலையில் எழுந்தால் இரவு வரை இந்த ஆட்சியின் மீது பொல்லாங்கு பேசுவதையே வாழ்க்கையாக கொண்டுள்ளார். ஏதாவது ஒரு இடத்தில் அவரை நிரூபிக்க செல்லுங்கள். அப்படி ஏதாவது நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். எச்.ராஜா கூறுவது அபத்தமானது. ஆட்சியின் மீது குறை சொல்வதற்கு எதுவும் இல்லை என்ற காரணத்தினால் இதுபோன்ற குறைகளை எடுத்துக்கொண்டிருக்கிறார். நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பொய் சொல்வது, புகார் சொல்வது தான் எச்.ராஜாவின் வாடிக்கை. அதனால் தான் அவரை தமிழ்நாட்டின் பாஜக பொறுப்பாளராக வைத்துள்ளனர்.

சொல்லுகின்ற ஆளைப் பொருத்துதான் கருத்துக்களுக்கு உண்டான வலுசேர்க்கப்படும். அதுபோன்ற கருத்துக்களை சொல்பவர்கள் யார் என்று சிந்தியுங்கள். நீரோட்டத்தில் அடித்து செல்பவர்கள், பெருமழை பெய்தால் எப்படி குப்பையை அடித்து செல்லுமோ அதற்கு உண்டான தகுதி உடையவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டு நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார். ஆய்வின்போது எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஆர்.டி. சேகர். மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், சென்னை பெருநகர வளர்ச்சி குழு உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, சிஎம்டிஏ தலைமை திட்ட அமைப்பாளர் ருத்ரமூர்த்தி உள்பட பலர் இருந்தனர்.

The post ‘’மழையில் அடித்துச்செல்லப்படும் குப்பைகள்’’ எச்.ராஜாவுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article