
லாகூர்,
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 273 ரன் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக செதிகுல்லா அடல் 85 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டும், ஆடம் ஜம்பா, ஸ்பென்சர் ஜான்சன் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 274 ரன் இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. டிராவிஸ் ஹெட் 59 ரன்களுடனும் (40 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் ஸ்டீவன் சுமித் 19 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டியது. அதற்குள் மைதானத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. மழை நின்றாலும் தண்ணீரை உடனடியாக அகற்ற முடியவில்லை. 2-வது இன்னிங்சில் 20 ஓவர் வரை நடந்திருந்தால் டக்வொர்த்- லீவிஸ் விதிப்படி முடிவு அறிவிக்கப்பட்டு இருக்கும். அதற்கும் வழியில்லாமல் போனதால் இந்த ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தார். ஆஸ்திரேலிய அணி 4 புள்ளியுடன் அரைஇறுதி முன்னேறியது. ஆப்கானிஸ்தான் 3 புள்ளியுடன் இருக்கிறது.
முன்னதாக மழை பெய்தபோது மைதானத்தை முழுமையாக மூடாததால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. அதை வெளியேற்றுவதற்கு மைதானத்தில் நவீன இயந்திரங்களும் இல்லை. அதன் காரணமாக தண்ணீரை வெளியேற்ற மைதானத்தில் இருந்த நிர்வாகிகள் வீடு துடைக்கும் மாப்பை வைத்து தள்ளினார்கள். அப்படி தள்ளும்போது மைதான பராமரிப்பாளர்களில் ஒருவர் வழுக்கிக் கொண்டு விழுந்தார். அதனை பார்த்து பெவிலியனில் இருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் சிரித்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.