மழைக்காலத்தில் பாடாய் படுத்தும் ஜலதோஷம்: சரிசெய்ய எளிய வழிமுறைகள்..!

3 months ago 14

மழைக்காலம் தொடங்கிவிட்டதால் மக்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சுற்றுச்சூழல், சுகாதாரமற்ற தண்ணீர், உணவுகள் போன்ற பல்வேறு காரணிகளால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும். பலருக்கு சளித்தொல்லை பாடாய் படுத்தும். சளி அதிகமாகும்போது உடல் வலி, தலைவலி, காய்ச்சல் என அடுத்தடுத்து பாதிப்புகள் வீரியமாகும்.

சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினாலே இந்த பாதிப்புகளை சரி செய்து ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.

காபி, டீக்குப் பதிலாக காய்கறி சூப் அருந்துவது நல்லது. முற்றிய வெண்டைக்காய் மற்றும் தக்காளியில் சூப் செய்து அருந்தினால் இருமல், ஜலதோஷம் விலகும். மழைக்காலத்தில் மூக்கு அடைத்துக் கொண்டு சளி பிடிப்பது போன்று இருக்கும். அத்தகைய சூழலில் மணத்தக்காளி கீரையை சூப் செய்து அருந்தினால் உடனடியாக ஜலதோஷம் விலகும். மணத்தக்காளி சூப்பினை சூடாக அருந்தினால் தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு, ஜலதோஷம் விலகும். நறுக்குமூலம் எனப்படும் கண்டதிப்பிலியிலும் சூப் செய்து அருந்தலாம்.

இஞ்சி டீ குடிக்கலாம். இஞ்சி டீ என்றதும் டீத்தூளுடன் இஞ்சி கலந்து தயாரிக்கும் டீதான் நினைவுக்கு வரும். ஆனால் இது அந்த இஞ்சி டீ அல்ல. இஞ்சித் துண்டுகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தயாரிக்கப்படும் டீ. இதனை அருந்தினால் சளி பாதிப்பு குறையும்.

மதிய உணவில் தூதுவளை ரசம் சேர்த்துக் கொள்ளலாம். சளித்தொல்லை இருந்தால் பூண்டுக் குழம்பு, மிளகுக் குழம்பு, சுண்டவற்றல் குழம்பு சாப்பிடுவது நல்லது. இவை மழை மற்றும் குளிருக்கு இதமான குழம்புகள் என்பதால் அனைவரும் சாப்பிடலாம்.

சுண்டகாய் வத்தலை தனியாக வறுத்துப் பொடித்து சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டாலும் சளித் தொந்தரவுகள் விலகும். இதேபோல் சின்ன வெங்காயத்தை உரித்து மதிய உணவுடன் பச்சையாகச் சாப்பிடுவதும் சளியை விலகச் செய்யும்.

மீன், இறைச்சி போன்ற உணவுகளை விரும்புகிறவர்கள் உண்ணலாம் என்றாலும் அவை செரிமானம் ஆகுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இறைச்சி உண்டதும் வெற்றிலை போடுவது அல்லது பெருஞ்சீரகம், புதினா போன்றவற்றில் எதையாவது மென்று சாப்பிடுவது செரிமானத்துக்கு வழிவகுக்கும். மாலை வேளைகளில் சுக்கு காபி அருந்துவது நல்லது.

மாலை நேரச் சிற்றுண்டியாக எண்ணெயில் பொரித்த வடை, போண்டா, பஜ்ஜி போன்ற உணவுப் பண்டங்களை அதிகமாக சாப்பிடக்கூடாது. இரவு உணவும் ஆவியில் வெந்த உணவுகளாகவோ அரிசி மற்றும் சிறுதானிய உணவுகளாகவோ இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது. இரவு தூங்கச் செல்வதற்கு முன் பூண்டுப்பால் அருந்துவது நல்லது.

பூண்டுப்பால் செய்முறை: 10, 12 பூண்டுப்பற்களை தோல் உரித்து பாலுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். முக்கால்வாசி வேக்காட்டின்போது மிளகுத்தூள், மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி நன்றாகக் கடையவேண்டும். இதனை சாப்பிட்டால் மூக்கடைப்பு, நெஞ்சுச்சளியால் ஏற்படும் மூச்சுத்திணறல், இருமல், தலைபாரம் போன்றவை நீங்கி இரவில் நிம்மதியான தூக்கம் வரும். 

Read Entire Article