மழைக்கால நோய்களில் இருந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை… பாதுகாப்பது எப்படி?

1 month ago 5

சென்னை: தமிழகத்தில் பருவமழை தொடங்கிள்ள நிலையில், பல இடங்களில் மழைநீர் தேக்கம் அதிகம் காணப்படும். இதனால் சளி, இருமல், காய்ச்சல், உடல்வலி போன்ற நோய் அறிகுறிகளுடன் மருத்துவர்களை நாடிச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். இதனால் பொதுமக்கள் எந்தவகையான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும், நோய்தடுப்பு முறைகள் ஆகியவை குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இயற்கை பேரிடர்கள் அல்லது போர்க்காலங்களில் அதிக மக்கள் ஒரே இடத்தில் தங்க வேண்டிய சூழல்களிலும், சுகாதாரமான குடிநீர் கிடைக்காத நிலைமைகளிலும் காலரா நோய் ஏற்படுகிறது. வயிற்றுப் போக்கு ஏற்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறியாகும். காலரா பாதித்தவர்களுக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு காய்ச்சல் மற்றும் வாந்தி இருக்கும். உடலில் நீர்ச்சத்து வெகுவாக குறைந்து விடும். ஓஆர்எஸ் (ORS) எனப்படும் வாய்வழியாக நீர்ச்சத்து எடுத்துக் கொள்ளும் சிகிச்சை முறையை பின்பற்ற வேண்டும்.

தமிழ்நாடு பொதுசுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்கள் படி, நன்றாக சமைத்த உணவை மட்டுமே உட்கொள்ளுதல், காய்ச்சிய நீரை மட்டும் குடித்தல் ஆகிய இரண்டுதான் இந்த நோயை தடுப்பதற்கான முக்கிய வழிமுறைகள். சுகாதாரமற்ற தண்ணீரால் பரவும் நோய்களை தவிர்க்க, “நீரை சுத்தமான பாத்திரத்தில் காய்ச்சிய பின் குடிப்பது அவசியம். நீரை குளோரின் பயன்படுத்தி சுத்தப்படுத்தலாம். தேங்கியிருக்கும் நீரில் இருக்க வேண்டியவர்கள் எலி காய்ச்சலை தவிர்க்க கால்களிலும் கைகளிலும் உறைகள் அணிந்து கொள்ளலாம்,” என்று தேசிய நோய் தடுப்பு மையம் தெரிவிக்கிறது.

இதேபோன்று குழந்தைகள் உட்பட அனைவருக்கும் ஏற்படக் கூடிய மற்றொரு நோய் டைஃபாய்டு ஆகும். அதீத காய்ச்சல் இதன் முக்கிய அறிகுறி. தலைவலி, வயிற்றுவலி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு இதன் மற்ற அறிகுறிகளாகும். பாக்டீரியாவால் ஏற்படும் இந்த நோய் கல்லீரலை பாதிக்கும். இதை குணப்படுத்த ஆண்டி பயாடிக் மருந்துகள் வழங்கப்படுகின்றன. மலத்தின் மூலம் பரவும் நோய் என்பதால் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சுகாதாரமான முறையில் கவனித்துக் கொள்வது அவசியமாகும்.

மழைநீர் மற்றும் வெள்ள நீர்த் தேக்கத்தால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகும். எனவே ஏடிஸ் கொசுக்களினால் ஏற்படும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா, அதோடு அனஃபலிஸ் கொசுவினால் பரவும் மலேரியா ஆகியவை ஏற்படக்கூடும். அதீத காய்ச்சல், தலைவலி, தசை வலி, மூட்டு வலி, வாந்தி, கண்களுக்கு பின்னால் வலி, தடிப்புகள் ஆகியவை டெங்கு நோய் பாதிப்பின் அறிகுறிகளாகும். பல வைரஸ் நோய்களை எதிர்கொள்ள எப்படி நேரடி மருந்து கிடையாதோ அதேபோல டெங்கு நோய்க்கு அதை ஏற்படுத்தும் வைரஸை நேரடியாக தாக்கும் மருந்து கிடையாது.

எனவே சீரான நீர்சத்து வழங்குவதே இந்த நோய்க்கான பிரதான சிகிச்சையாகும். தொடர் வாந்தி, வாய் அல்லது மூக்கிலிருந்து ரத்தம், மூச்சுத் திணறல் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் அது உயிருக்கு ஆபத்தாகிடும் வாய்ப்புள்ளது. தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் மழை நீரின் தேக்கம் அதிகமாக இருக்கும். இதனால் சளி, இருமல், காய்ச்சல், உடல்வலி போன்ற நோய்கள் அதிகமாக ஏற்படும். நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளவர்களை பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் தாக்கி, தீவிர உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

எனினும் மழைக்கால நோய்கள் குறித்துப் போதிய விழிப்புணர்வும் தடுப்பு நடவடிக்கைகளும் இருந்தால் நோய் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம் என எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையின் பொது நல மருத்துவர் நந்த குமார் தெரிவிக்கிறார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: மழைக்காலங்களில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பெரும்பான்மையாக பாதிக்கப்படுவது சளி, இருமல் போன்ற பிரச்னைகளால்தான். குறிப்பாக, பருவகால காய்ச்சல் (Seasonal Flu) தொற்று அதிகமாக காணப்படும்.

இதற்காகவே, ஆண்டு தோறும் தடுப்பூசிகள் போடப்படுகிறது. இதில் அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள், ஒன்றோடு ஒன்றாக இருப்பதால் பாதிக்கப்பட்ட குழந்தையிடம் இருந்து மற்றோரு குழந்தைக்கு எளிதாக தொற்று பரவுகிறது. மூக்கில் இருந்து நீர் வடிவது, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்னைகள் எளிதாக ஏற்படுகின்றன.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் கூட பருவகால காய்ச்சல் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், இந்த பிரச்னை இயல்பாகவே 2 அல்லது 3 நாட்களில் சரியாகும். அவசர சிகிச்சையாக வீட்டில் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் நிரந்தர தீர்வாகாது. ஒருவேளை 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் அல்லது மூச்சுத்திணறல் ஏற்படும். பெரியவர்கள் மற்றும் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஆலோசனை பெறுவது நல்லது.

வீட்டிலேயே எளிய வைத்தியம்…
* மழைக்காலங்களில், வீட்டில் இருக்கும் பெரியவர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வது அவசியம். வெளியில் வேலைக்கு சென்று வருபவர்கள் மற்றும் குழந்தைகள் பெரியவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். பெரியவர்கள் காய்கறி சூப் மற்றும் சிட்ரஸ் பழங்களை உட்கொள்ளுதல் நல்லது.

* பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவரை அணுகுவதற்கு முன்னதாக, பாராசிட்டமால் மற்றும் முன்னதாக மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை உட்கொள்ளலாம்.

* தினசரி உணவில் சிட்ரஸ் பழங்கள், பச்சை காய்கறிகள், தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் சளி பிரச்னைகளை தடுக்கலாம். பொதுவாக, நாம் எப்போதும் பயன்படுத்தும் மருந்துகள் பருவ காய்ச்சலுக்கு பல நேரங்களில் தீர்வாக இருப்பது கிடையாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* குழந்தைகளுக்கு தேவைப்படும் மருத்துகளை வீட்டில் இருப்பு வைத்திருக்க வேண்டும். ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு சளி பிரச்னை ஏற்படத் தொடங்கும்போது நாசி சொட்டுகள் பயன்படுத்தலாம்.

* அதிக சளி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படும் குழந்தை வீட்டில் இருந்தால் நெபுலைசர் வைத்துக் கொள்வது சிறந்த தீர்வாக இருக்கும்.

* குழந்தைகள் நீர்ச்சத்தோடு இருப்பதை உறுதி செய்ய வேண்டும், தேன் கொடுப்பதால் சளி தொந்தரவுகளை குறைக்கலாம்.

The post மழைக்கால நோய்களில் இருந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை… பாதுகாப்பது எப்படி? appeared first on Dinakaran.

Read Entire Article