சென்னை,
பருவமழைக் காலங்களில் தக்காளி விலையை கட்டுக்குள் வைக்க அரசு முயற்சித்து வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில் ஓரிரு மாதங்களுக்கு தக்காளியின் விலை உயர்வது சகஜம். கடந்த ஆண்டும் இதே போல் விலையேற்றம் வந்தது. அப்போது கூட தமிழக அரசின் சார்பில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், பண்ணை பசுமை கடைகளின் மூலமாவும், ரேஷன் கடைகள் மூலமாகவும் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
அதன் மூலமாக விலையேற்றம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதுபோன்ற நடவடிக்கைகள் இப்போதும் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சென்னையில் தக்காளி விலை வெகுவாக கட்டுக்குள் இருக்கிறது. இந்த நடவடிக்கைகள் பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.