*விவசாயிகள் எதிர்பார்ப்பு
கேடிசி நகர் : பாளை அருகே கடந்தாண்டு பெய்த மழை, வெள்ளத்தால் முற்றிலும் சேதமடைந்த மருதூர் மேலக்கால்வாய் கரை, விரைவில் சீரமைக்கப்படுமா என விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.பாளை அருகேயுள்ள மருதூர் அணைக்கட்டு மூலம் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர், வல்லநாடு, முறப்பநாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகிறது. மருதூர், மேலக்கால், கீழக்கால் வாய்கால்கள் மூலம் இந்த பகுதிகளுக்கு விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த அதிகன மழையால் மருதூர் மேலக்கால் கரை சேதம் அடைந்து காணப்படுகிறது.
அந்த கால்வாய் ஓரமாக மருதூர் அணைக்கட்டுக்கு பொதுமக்கள் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்து செல்வார்கள். ஆனால் தற்போது மருதூர் மேலக்கால்வாய் கரை சேதமடைந்து காணப்படுவதுடன், அங்குள்ள சிறிய பாலமும் உடைந்துள்ளதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாய்க்காலில் செல்லும் தண்ணீரும் வீணாகிறது.
இதனால் கவலையடைந்த பாசன விவசாயிகள், இவ்வாறு முறையான பராமரிப்பின்றியும் மழையாலும் முற்றிலும் சேதமடைந்த மருதூர் மேலக்கால்வாய் கரையோர பகுதிகளை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்த போதும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. எனவே, இனியாவது இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் சீரமைக்க முன்வருவார்களா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள், வாகனஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினர் மத்தியிலும் வலுவாக
எழுந்துள்ளது.
The post மழை, வெள்ளத்தால் சேதமடைந்த மருதூர் மேலக்கால்வாய் கரை விரைவில் சீரமைக்கப்படுமா? appeared first on Dinakaran.