சென்னை: தமிழகத்தில் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை ெதாடங்குகிறது. இதையொட்டி எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, பருவமழை காலத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்பட கூடாது என்பதை நோக்கமாக கொண்டு அதிகாரிகள் ஒருங்கிணைந்து, திறம்பட செயலாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 15ம் தேதிக்கு மேல் தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை டிசம்பர் இறுதி வரை நீடிக்கும். இந்த மழைதான் தமிழகத்திற்கு அதிகப்படியான நீர் ஆதாரத்தை பெருக்கும். அதேநேரம், வடகிழக்கு பருவமழை காலங்களில் புயல் மற்றும் அதி கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட சில இடங்களில் அதிகப்படியான நீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று வடகிழக்கு பருவமழையையொட்டி எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், செந்தில் பாலாஜி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், தா.மோ.அன்பரசன் மற்றும் தலைமை செயலாளர் முருகானந்தம், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், போலீஸ் கமிஷனர் அருண், அரசு துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்னாள் முன்னெச்சரிக்கையுடன் இருந்தாலே, எந்த பாதிப்பையும் தடுத்திட முடியும். கடந்த 3 ஆண்டுகளாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இரண்டு பருவ காலங்களில் தமிழ்நாட்டிற்கு மழை கிடைக்கிறது. இதில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் வடகிழக்கு பருவமழை காலத்தில், தமிழ்நாட்டிற்கு அதிகப்படியான மழை நீர் கிடைக்கிறது.
முன்பெல்லாம் வடகிழக்கு பருவ மழையானது பருவம் முழுவதும் பரவலாக பெய்து கொண்டிருந்தது. சமீப காலமாக காலநிலை மாற்றத்தால், சில நாட்களிலேயே மொத்தமாக பெய்து விடுகிறது. இன்னும் சொல்லப்போனால், சில மணி நேரங்களிலேயே பருவகாலத்திற்கான, மொத்த மழையும் கொட்டித் தீர்த்து விடுகிறது. இதனை எதிர்கொள்வதுதான் மிக மிக முக்கியமானதாக இருக்கிறது.
கடந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை காலத்தில், சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை பெய்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனை தமிழ்நாடு அரசு திறம்பட எதிர்கொண்டதன் காரணமாக, பாதிப்பிற்குள்ளான மாவட்டங்கள் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பியது. அனைத்து அமைச்சர்களும், அனைத்து துறை அதிகாரிகளும், அலுவலர்களும் களத்தில் இருந்தார்கள். பாதிப்பு ஏற்பட்டது தெரியாத வகையில் உடனடியாக நிலைமைகளை நாம் சமாளித்தோம்.
அதேபோல், இந்த ஆண்டும் பேரிடர்களின் தாக்கத்தினை திறம்பட எதிர்கொள்ள தேவையான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. சரியான நேரத்தில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் வானிலை முன்னெச்சரிக்கையினால் பெரிய அளவிலான சேதங்களை தவிர்க்க முடியும். பேரிடர்களை எதிர்கொள்வதில், முன்னெச்சரிக்கை தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், அரசு அதற்கு தேவையான உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது.
குறிப்பாக வானிலை தரவுகளை உடனுக்குடன் வழங்க கடந்த 22.08.2024 அன்று தரம் உயர்த்தப்பட்ட மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தினை நான் திறந்து வைத்தேன். முன்பு இருந்த மையத்தினை ஒப்பிடும்போது, தற்போது பல்துறை வல்லுநர்கள் கொண்ட தொழில்நுட்ப குழுவுடன் இந்த மையம் இயங்கி வருகிறது. மேலும், பல துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில், ஒருங்கிணைப்பு மையத்துடன் தற்போது செயல்பட்டு வருகிறது. மழைக்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது மீனவ தோழர்கள்தான். ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு புயல், கன மழை குறித்த தகவல்களை நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக உரியநேரத்தில் கொண்டு சேர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வெள்ளம், புயல் போன்ற பேரிடர்களில் தகவல் தொடர்பு, மின்சார வசதி போன்ற அத்தியாவசிய சேவைகளை முடிந்தவரை தடையின்றி வழங்கப்பட வேண்டும். பாதுகாப்பான குடிநீர், பால், உணவு பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். வெள்ளத்தினால் நோய்த் தொற்று ஏதும் ஏற்டாமல் இருக்க உரிய பொது சுகாதார சேவை மற்றும் மருத்துவ சேவைகளை வழங்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றினால் மட்டுமே இதனை உறுதி செய்ய முடியும். பேரிடர் மேலாண்மையில், தன்னார்வலர்களது பங்கும் மிகவும் அவசியமானதாகும். எனவே தேடல், மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கென முறையான செயல்திட்டத்தினை மாவட்ட நிர்வாகம் உருவாக்க வேண்டும். எந்த ஒரு சவாலாக இருந்தாலும், அதில் ஈடுபடும் அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஓரணியாக நின்று செயல்பட்டால், அதில் வெற்றி என்பது 100 விழுக்காடு சாத்தியம். பருவமழையினால் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு பொதுமக்களின் துயர் துடைக்க அரசு நிர்வாகம் மொத்தமும் ஓரணியாக நின்று செயல்பட்டால் வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.
‘‘சென்னை உள்ளிட்ட மாநகர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்”
சென்னை உள்ளிட்ட மாநகரங்கள் பருவமழை காலங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இயங்க வேண்டும். நாட்டிற்கு முன்னுதாரணமாக சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு, வார்டு, தெருவாரியான வெள்ள அபாய எச்சரிக்கை வழங்க சென்னை நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதியோர், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு தேவையான உதவிகளை வழங்க முன்கூட்டியே திட்டமிட்டு மாவட்ட நிர்வாகம் செயல்படுவது மிக மிக அவசியமாகிறது. வெள்ளப் பேரிடர்கள் ஏற்படும் பொழுது தாழ்வான பகுதிகளில் இருந்து முன் கூட்டியே வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது மிக முக்கியம்.
இந்த பணிகளை தமிழ்நாடு அரசின் அனைத்து களப் பணியாளர்களும், பொதுமக்களுடன் இணைந்து அவர்களுக்கு அறிவுறுத்தி வெள்ளத்திற்கு முன்னரே நிவாரண மையங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களுக்கு தேவையான தூய்மையான குடிநீர், கழிவறை, தடையற்ற மின்சாரம் உரிய நேரத்தில் உணவு ஆகியவற்றை வழங்க வேண்டும். சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த பகுதிகளில் ஆயத்த பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
வெள்ளத் தடுப்பு பணிகளை மட்டுமல்ல, ஆண்டுதோறும் நாம் மேற்கொள்கின்ற தூர்வாரும் பணிகள், பாலங்கள், சிறுபாலங்களில் கழிவுகளை அகற்றுதல், நீர்நிலைகளின் கரைகளை வலுப்படுத்துதல், அறுந்து விழக்கூடிய நிலையில் உள்ள மின் கம்பிகளை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளும் சரியாக நடைபெற்று வருகிறதா? என்பதையும் ஆய்வின்போது கண்டறிய வேண்டும். வெள்ளக் காலம் என்றாலே மாணவர்கள் ஆர்வத்தால் ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைகளுக்கு சென்று விளையாடுவதால், உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்கு, பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும் என்று முதல்வர் கூறினார்.
அதிகாரிகள் கூட்டத்தில் துணை முதல்வர் அதிரடி
தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து அரசு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதுவரை அரசு சார்பில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் விவரித்தபோது, துணை முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு, முதன்முதலில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின், ஏற்கனவே நடந்த பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான கூட்டத்தில் தாம் தெரிவித்த ஆலோசனைகளின் முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து கேட்டார். தொடர்ந்து, தமிழகத்தில் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார். மேலும், அதிகாரிகள் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாவண்ணம், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்குமாறும் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
The post மழை வெள்ள பாதிப்புகளால் ஓர் உயிரிழப்பு கூட நேரக் கூடாது: வடகிழக்கு பருவமழை ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.