மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை புகழாரம்

4 weeks ago 9

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வடகிழக்கு பருவமழை பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையங்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வடமாவட்டங்களில் கடுமையான கனமழை பெய்தது. ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், மழையால் எந்தவிதமான பாதிப்பும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை போன்ற பல துறைகளின் அதிகாரிகள், மாநகராட்சி தூய்மை பணியாளர்க தீவிரமாக களத்தில் இறங்கி அரும்பணியாற்றியிருக்கிறார்கள். இதன்மூலம் கடும் மழையினால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் மழை நின்ற சில மணித்துளிகளிலேயே இயல்பு நிலைக்கு திரும்பியதை தமிழக அரசின் சாதனையாக கருதலாம்.

இதற்காக தமிழக முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள், தூய்மை பணியாளர்களை மனதார பாராட்டுகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது மிகுந்த வரவேற்புக்குரியது. கனமழையை அகற்றுவதில் மின்னல் வேகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

சென்னை மாநகர மக்கள் அனைவரும் நிம்மதியடைகிற வகையில் இன்று இயல்பு நிலை திரும்பியிருக்கிறது. இதற்கு தமிழக அரசின் புயல் வேக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே முக்கிய காரணமாகும். எதையும் விமர்சனம் செய்து வந்த கவர்னர் ஆர்.என்.ரவியே தமிழக அரசின் நடவடிக்கைகளை பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்கட்சியினர் விமர்சிக்க முடியாத அளவிற்கு தமிழக அரசின் செயல்பாடுகளை அனைவரும் பாராட்டுகிறார்கள். இத்தகைய சீரிய முயற்சிகளை திட்டமிட்டு, செயல்படுத்திய முதல்-அமைச்சர் உள்ளிட்டவர்களை தமிழக காங்கிரஸ் சார்பில் மனதார பாராட்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article