சென்னை: மழை மீட்பு பணிக்காக அமைக்கப்பட்ட காவல் சிறப்புக் கட்டுப்பாட்டு அறையை டிஜிபி சங்கர் ஜிவால் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பேரிடர் மீட்பு பணிக்காக பயன்படுத்தப்பட உள்ள உபகரணங்களையும் பார்வையிட்டார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதையடுத்து, காவல்துறையும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. மீட்பு பணிகளில் ஈடுபட தமிழகம் முழுவதும் பயிற்சி பெற்ற 20,898 போலீஸார் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர். இவர்கள் 136 பேரிடர் மீட்புக் குழுக்களாக பிரித்து அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த மீட்பு படையினரில் 3 கம்பெனிகள் (9 குழுக்கள்) கோவை, ஊட்டி, திருச்சி, மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும், 3 கம்பெனிகளில் உள்ள 9 குழுக்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், காவல்துறை சார்பில் சென்னை ஆர்.ஏ.புரம், மருதம் வளாகத்தில் உள்ள செயலாக்கம் அலுவலகத்தில் பருவ மழை தொடர்பான மாநில காவல் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.