மழை பெய்தால் ஒதுங்கக்கூட இடமில்லாமல் தவிப்பு சிதம்பரம் பஸ் நிலைய பணியை விரைந்து முடிக்க வேண்டும்

5 hours ago 3

*பயணிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சிதம்பரம் : சிதம்பரம் பஸ் நிலைய பணிகளை விரைந்து முடிக்க பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோயில், தில்லை காளியம்மன் கோயில், பிச்சாவரம் சுற்றுலா தளம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஆன்மீக தலங்களும், சுற்றுலா மையங்களும், கல்வி நிறுவனங்களும் நிறைந்த ஒரு நகரமாக திகழ்ந்து வருகிறது. இதனால் தினமும் பேருந்து, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் நகர் பகுதிக்கு ஏராளமானோர் வருகின்றனர்.

இதனால் சிதம்பரம் பேருந்து நிலையத்திற்கு அதிக அளவில் சுற்றுலா பேருந்துகள், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் வந்து செல்கின்றன. இதனால் பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். சிதம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடம் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலான கட்டிடம். இதனால் இந்த கட்டிடங்கள் சேதமடைந்து விரிசல்விட்டு, இடிந்து விழும் நிலையில் இருந்தது.

இதையடுத்து நகராட்சி நிர்வாகம் மூலம் பழைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, ரூ.4.47 கோடி மதிப்பில் புதிய கட்டிட கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதைதொடர்ந்து பேருந்து நிலையத்தில் உள்ள பழைய கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் ஒதுங்குவதற்குகூட இடமில்லாமல் சிரமப்பட்டனர்.

எனவே பேருந்து நிலையத்தில் நடந்து வரும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், பேருந்து நிலையத்தில் பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளதால், வெயில், மழை காலங்களில் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

இதைதொடர்ந்து நகரமன்ற தலைவர் செந்தில்குமார் அறிவுறுத்தலின்பேரில், நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்து, பஸ் நிலையத்தில் நிழற்குடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் பேன் வசதியுடன் இருக்கைகள் அமைத்து கொடுக்கப்பட உள்ளது. இப்பணிகள் 3 மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும், என்றனர்.

The post மழை பெய்தால் ஒதுங்கக்கூட இடமில்லாமல் தவிப்பு சிதம்பரம் பஸ் நிலைய பணியை விரைந்து முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article