மழை பாதித்த சம்பா நெல் பயிர்களுக்கு நுண்ணூட்ட உரம் தெளித்து காப்பாற்றலாம்

1 month ago 9

திருவாரூர், டிச. 6: வயலில் தண்ணீரை வடித்து விட்டு மழை பாதித்த சம்பா நெல் பயிர்களுக்கு நுண்ணூட்ட உரம் தெளித்து காப்பாற்றலாம். காலை, மாலை வேளையில் உரம் தெளிக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு (2024-25) ஆண்டு சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 604 ஏக்கரில் சாகுபடி நடைபெற்றுள்ளது. தற்போது 70 நாட்களுக்கும் மேற்பட்ட பயிர்களாக இருந்து வருகின்றன. இந்நிலையில் நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை என்பது அக்டோபர் முதல் வாரத்திலேயே துவங்கி பெய்து வருகிறது.அதன் பின்னர் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழையாக பெய்தது.

மேலும் வங்ககடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறிய நிலையில் அதற்கு பெஞ்சல் என்று பெயரிட்டபட்டு இந்த புயலானது கடந்த மாதம் 30ம் தேதி பாண்டிச்சேரிக்கும் மாமல்லபுரத்திற்குமிடையே கரையை கடந்த நிலையில் இதன்காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ததால் இதன்காரணமாக வெள்ளபெருக்கும் ஏற்பட்டது. மேலும் இந்த புயல் சின்னம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 26 மற்றும் 27 தேதிகளில் கனமழை பெய்த நிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரிலான நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்தது.

தண்ணீரை வடியவைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மழை வெள்ள பாதிப்பால் பாதி க்கப்பட்டுள்ள நெற்பயிர்களை பாதுகாப்பது குறித்து கலெக்டர் சாரு கூறியிருப்பதாவது, நெல் வயல்களில் நீர் தேங்கிய நிலையில் பிராண வாயு கிடைக்காமல் வேர்களின் சுவாச இயக்கம் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதுடன் நுண்ணூயிர்களின் செயல் குறைவதற்கும் வாய்ப்புள்ளது. மேலும் மண அதிகம் குளிர்ந்துவிடுவதால் இயற்கையாக மண்ணில் காணப்படும் வெப்பம் குறைந்து மணிசத்து, சாம்பல் சத்து, துத்தநாகசத்து மற்றும் தாமிரசத்துகளை பயிர் எடுத்து கொள்வதில் பற்றாகுறை ஏற்பட்டு பயிரின் வளர்ச்சி தடைபடுவதற்கு வாய்ப்புள்ளது.

நீர்தேங்கி வயல்களில் இருந்து வரும் நீரை உடனடியாக வெளியேற்றி வேர் பகுதிக்கு காறோட்டம் ஏற்படுத்த வேண்டும். அதிக தூர்கள் இருக்கும் நெல்குத்திலிருந்து சில தூர்களை பிடிங்கி நாற்றுகள் கரைந்துபோன இடங்களில் நட்டு எண்ணிக்கையை சரியாக பராமரிக்க வேண்டும். நீர் வடிந்தவுடன் தழைசத்து உரத்தை அமோனியா வடிவில் இடவேண்டும். மேலும் பயிரின் வளர்ச்சி சரியாக இல்லாத இடங்களில் ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன் 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம்புண்ணாக்கு கலந்து ஒரு நாள் இரவு வைத்திருந்து மறுநாள் 17 கிலோ பொட்டாஷ் கலந்து வயலில் சீராக தெளிக்க வேண்டும்.

மணிசத்தை டிஏபி உரத்தின் மூலமாக 2 சதவிகித அளவில் தெளிப்பதுடன் நுண்ணூட்ட உரகலவையினை மேலுரமாக தெளிக்க வேண்டும். இதுமட்டுமின்றி பயிரின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டிருந்தால் இலைவழி உரமாக ஒரு ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன் ஒருகிலோ ஜிங்சல்பேட்டை 200 மில்லி தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும் அல்லது 4 கிலோ டிஏபி உரத்தினை 10 லிட்டர் நீரில் கலந்து ஒரு இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலை வடியவைத்து கிடைக்கும் நீருடன் 2 கிலோ பொட்டாஷ் உரத்தை சேர்த்து 190 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்குமாறு விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் எதிர்பார்ப்பு
மண் அதிகம் குளிர்ந்துவிடுவதால் இயற்கையாக மண்ணில் காணப்படும் வெப்பம் குறைந்து மணிசத்து, சாம்பல் சத்து, துத்தநாகசத்து மற்றும் தாமிரசத்துகளை பயிர் எடுத்து கொள்வதில் பற்றாகுறை ஏற்பட்டு பயிரின் வளர்ச்சி தடைபடுவதற்கு வாய்ப்புள்ளது.

The post மழை பாதித்த சம்பா நெல் பயிர்களுக்கு நுண்ணூட்ட உரம் தெளித்து காப்பாற்றலாம் appeared first on Dinakaran.

Read Entire Article