மழை குறைந்ததால் விளை நிலங்களில் சொட்டு நீர் மூலம் மானாவாரி காய்கறி சாகுபடி தீவிரம்: கோடை மழை வரை சமாளிக்க ஏற்பாடு

18 hours ago 2


பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் மழை குறைந்ததால், விளை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு, சொட்டு நீர் தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். கோடை மழை வரை சமாளிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில், தென்னைக்கு அடுத்தப்படியாக பல்வேறு காய்கறிகள் மற்றும் மானாவாரி பயிர் சாகுபடி அதிகளவு உள்ளது. இதில் வெண்டை, புடலங்காய், கத்தரி, பச்சை மிளகாய், தக்காளி, பூசணி உள்ளிட்ட பல காய்கறி சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பருவமழையை எதிர்நோக்கி அதற்கேற்ப காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2024ம் ஆண்டு பெய்த கோடை மழையை தொடர்ந்து, தென்மேற்கு பருவமழையும் அதன்பின் வடகிழக்கு பருவமழையும் அடுத்தடுத்து பெய்தது.

இதனால், பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தின் பெரும்பாலான விளை நிலங்களிலும், உழவு பணி மேற்கொண்டு மண்ணின் தன்மைகேற்ப பல்வேறு காய்கறி சாகுபடி மேற்கொண்டனர். வடகிழக்கு பருவ மழையை எதிர்நோக்கி சாகுபடி செய்யப்பட்ட தக்காளி, பூசணி, கத்திரிக்காய், வெண்டைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் அறுவடை கடந்த மாதம் இறுதி முதல் சில வாரமாக தீவிரமானது. இதையடுத்து அறுவடை செய்யப்பட்ட விளை நிலங்களை பல விவசாயிகள் மீண்டும், உழவு பணி மேற்கொண்டு காய்கறி சாகுபடியில் ஈடுபட துவங்கியுள்ளனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து மழை இல்லாமல் இருந்தாலும், மண்ணின் ஈரப்பதம் மிகவும் குறைவான இடங்களில், தற்போதுள்ள வெயிலின் தாக்கத்தை சமாளிக்க விவசாயிகள் பலர் தங்கள் விளை நிலங்களில், கிணற்று பாசனம் மூலம் தண்ணீரை இறைத்து நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை தொடர்ந்துள்ளனர்.

இதில் பல விவசாயிகள், மானாவாரி பயிர் மற்றும் காய்கறி சாகுபடியை துவங்கியுள்ளதால், அவை கருகாமலும் வாடாமலும் இருக்க, சொட்டு நீர் பாசனமுறையை ஏற்படுத்தி தண்ணீர் பாய்ச்சுவதை தீவிரமாகியுள்ளனர். அடுத்த ஏப்ரல் மாதம் கோடை மழைபெய்யும் என்றாலும், அதுவரையிலும் காய்கறிகளின் சாகுபடியை தொடர்ந்து மேற்கொள்ள, தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க சொட்டு நீர் பாசனத்தை கையாண்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

The post மழை குறைந்ததால் விளை நிலங்களில் சொட்டு நீர் மூலம் மானாவாரி காய்கறி சாகுபடி தீவிரம்: கோடை மழை வரை சமாளிக்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Read Entire Article