மலைமீது தீபமேற்றும் பாக்கியம் பெற்ற பருவத ராஜகுலம்

1 month ago 6

‘தீப மங்கள ஜோதி நமோ நமோ’ என அருணகிரிநாதர் ஆரவாரித்த திரு அண்ணாமலைக்கு, ஆயிரமாயிரம் பெருமைகள் உண்டு. உலகின் நடுநாயகமாக எழுந்தருளியது அண்ணாமலை. அடி முடி காணாத அருட்பெரும் ஜோதியை அண்ணாமலையில் தரிசிக்க முற்பிறவி பயன் வேண்டும். ஓங்கி உலகளந்து நிற்கும் மாமலையின் மீது, மகா ஜோதியை தரிசிப்பதே பாக்கியமென்றால், மகாஜோதியை அண்ணாமலையில் ஏற்றுவது எத்தனை பாக்கியம்..! நினைக்கவே மெய்சிலிர்க்கச் செய்யும் இத்திருப்பணியை, தொன்றுதொட்டு நிறைவேற்றும் பெருமையை பருவத ராஜகுலம் பெற்றுள்ளது.திருவண்ணாமலை நகரில் மட்டும் பருவத ராஜகுல சமுகத்தைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. அவர்களில், ஐந்து வம்சாவளிகளாக உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மலை மீது தீபம் ஏற்றும் திருப்பணியை நிறைவேற்றுகின்றனர்.

இறைஜோதியை ஏற்றும் உரிமை பருவத ராஜகுலத்தினருக்கு எப்படி கிடைத்தது? எல்லாம் இறைவனின் திருவிளையாடல்தான். பருவத ராஜகுல வம்சத்தின் வழிவந்த, பருவதராஜனின் அருந்தவப் புதல்வியாக அவதரித்தவர் பார்வதி தேவி. பருவத ராஜகுலத்தினர் மீன் பிடித் தொழிலை மேற்கொள்வதால் மீனவர்கள் என்றும், செம்பொன்னால் செய்யப்பட்ட படகில் சென்று மீன் பிடித்ததால் செம்படவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். முன்னொரு காலத்தில், பிரம்ம ரிஷிகளின் தியானத்தைக் கலைக்கும் வேலையில் அசுரர்கள் ஈடுபட்டனர். பிரம்ம ரிஷிகள் கோபப்படும்போது, மீன் உருவாக மாறி, கடலுக்குள் சென்று அசுரர்கள் மறைந்து கொள்வார்கள். இப்படி தோன்றியும் மறைந்தும் தம்மை வேதனைப்படுத்தும் அசுரர்களை அழித்து, தம் தவம் சிறக்க வேண்டி, சிவபெருமானிடம் ரிஷிகள் முறையிட்டனர். அடியார்களின் இன்னலை உணர்ந்த சிவபெருமான், பருவதராஜாவை அழைத்தார். கடலுக்குள் மீன் வடிவில் மறைந்துள்ள அசுரர்களை அழிக்குமாறு கட்டளையிட்டார். அதற்கு உதவியாக ஞான வலையையும், தேவதச்சனான விஸ்வகர்மா உருவாக்கிய செம்பொன் படகையும் அளித்தார்.

கடலுக்குள் விரைந்து சென்ற பருவத ராஜா, மீன் வடிவிலான அசுரர்களைப் பிடித்து கரையில் போட்டார். அசராத அசகாய சூரர்களான அசுரர்கள், மீண்டும் மீண்டும் கடலுக்குள் துள்ளிக் குதித்து மறைந்தனர். சோர்வடைந்த பருவதராஜா மகள், பார்வதியிடம் உதவி கேட்டார். மனம் இரங்கிய பார்வதிதேவி, கடல் நடுவே அகோர உருவில் வாய் திறந்து நிற்க, பருவதராஜனின் வலையில் சிக்கிய மீன்களை எல்லாம் தன்னுடைய வாயில் போட்டு அழித்தார். அப்போது எதிர்பாராத நிகழ்வாக, அசுரர்களுக்கு விரித்த வலையில், கடலுக்கு அடியில் தவம் புரிந்த மீன மகரிஷி சிக்கிக் கொண்டார்.தவம் கலைந்த கோபத்தில் துடிதுடித்த மீன மகரிஷி, ‘உன் ராஜ வாழ்க்கை அழிந்து, மீன் பிடித்துதான் இனி நீ வாழ வேண்டும்.’ என்று பருவதராஜாவுக்கு சாபமிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பருவதராஜா, ஓடோடிச்சென்று சிவனிடம் முறையிட்டார்.

கருணை கொண்ட சிவன், கார்த்திகைத் திருநாளில் திருவண்ணாமலையில் ஜோதிப் பிழம்பாகக் காட்சி தருவேன், அந்த ஜோதியை ஏற்றும் பணியை பருவதராஜ வம்சத்தினர்தான் நிறைவேற்ற வேண்டும். ஜோதியை தரிசிக்கும் கோடிக்கணக்கான பக்தர்கள், ‘அண்ணாமலைக்கு அரோகரா’ என்று முழக்கமிடும்போது அந்த பக்திப் பரவசத்தின் புண்ணியமெல்லாம் பருவதகுலத்தையே வந்து சேரும் கவலைப்பட வேண்டாம் என வரம் அருளினார். இவ்வாறு அரனாரின் அருளால், காலம் காலமாக பருவத ராஜகுலத்தினர் திருவண்ணாமலை உச்சியில் தீபமேற்றும் திருப்பணியை நிறைவேற்றி வருகின்றனர்.தீபம் ஏற்றுவதற்காக ஆண்டுதோறும் பருவதராஜகுலத்தைச் சேர்ந்த 5 பேர் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதமிருப்பது வழக்கம். தீபம் ஏற்றும் தெய்வீகப் பணியாளர்களுக்கு, அண்ணாமலையார் கோயிலில் பரிவட்டம் கட்டப்படும். பின்னர், அண்ணா மலையார் சந்நதியில் ஏற்றப்படும் பரணி தீபத்தில் இருந்து, இவர்கள் மகா தீபம் ஏற்றுவதற்கான தீபச்சுடரை ஒரு மண் சட்டி அகல் வைத்து சிவாச்சாரியார்கள் வழங்குவார்கள்.

மேளதாளம் முழங்க மலைமீது வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெறும். மண்சட்டி அகலில் ஏந்திச்செல்லும் தீபச்சுடரை, அணையாமல் பாதுகாத்து 2,668 அடி உயர மலை உச்சிக்குக் கொண்டுசென்று, மலைமீது வைக்கப்பட்டுள்ள மகாதீப கொப்பரையில் இடுவார்கள். ஏற்கெனவே நெய்யும், திரியும் இட்டு, திரி நுனியில் கற்பூரக் கட்டிகளைக் குவித்து வைத்திருப்பார்கள். இப்போது இடப்படும் தீபச்சுடர் பளிச்சென்று பெரும் ஜோதியாகி பேரொளியுடன் திகழும். தீபத்திருநாளன்று கீழே அண்ணாமலையார் திருக்கோயிலில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளியதும், மலை உச்சியில் இவ்வாறு மகா தீபம் ஏற்றப்படுவதைக் காண கண்கோடி வேண்டும்.

The post மலைமீது தீபமேற்றும் பாக்கியம் பெற்ற பருவத ராஜகுலம் appeared first on Dinakaran.

Read Entire Article