மலைப்பாதையில் டிரக்கிங் செல்ல தடை: வனத்துறை அதிகாரிகள் உத்தரவு

2 months ago 7

வேலூர்: கோடை காலம் தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மலைப்பாதையில் டிரக்கிங் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மேட்டூர் பச்சமலை, தேனி குரங்கணி, ஆத்தூர் கல்வராயன்மலை, களக்காடு முண்டந்துறை உள்ளிட்ட 44 இடங்களில் மலையேற்ற பயிற்சிக்கான பாதைகள் (டிரக்கிங்) உள்ளன. ஆங்காங்கே மலையேற்ற பயிற்சிக்கு என தனிக்குழுக்களும் இயங்கி வருகிறது. இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் வனச்சரகர் மற்றும் மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி பெறுகின்றனர்.

கடந்த 2018ம் ஆண்டு தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் காட்டுத்தீயில் சிக்கினர். இதில் 20க்கும் மேற்பட்டோர் உடல் கருகி இறந்தனர். இதனால், கோடை காலத்தில் மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி கிடையாது என்ற முடிவுக்கு வனத்துறை வந்தது. தற்போது, மாநிலம் முழுவதும் கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், ஆங்காங்கே மலைப்பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிகிறது. இதனால், மலைப்பாதைகளில் மலையேற்ற பயிற்சி மேற்கொள்ள தடை விதித்து வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ளது. இதனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏலகிரிமலை, சேலம் மாவட்டம் ஏற்காடு மலை, மேட்டூர் பச்சமலை, ஆத்தூர் கல்வராயன்மலை உட்பட மாநிலம் முழுவதும் கோடை காலம் முடியும் வரை மலைப்பகுதியில் டிரக்கிங் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடை கால தீ விபத்து நேரங்களில், காட்டிற்குள் சென்று யாரும் சிக்கி விடக்கூடாது என்பதற்காக மலையேற்ற பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் தீ தடுப்பு பணிகளை மேற்கொள்ள வனஊழியர்களை முடுக்கி விட்டுள்ளோம். தடை மீறி யாராவது மலையேற்ற பயிற்சிக்கு சென்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post மலைப்பாதையில் டிரக்கிங் செல்ல தடை: வனத்துறை அதிகாரிகள் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article