மலேசியாவுக்குப் புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு: சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு

3 months ago 18

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் இருந்து நேற்று நள்ளிரவு மலேசியாவுக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார். இதைத் தொடர்ந்து, அந்த விமானம் நிறுத்தி வைக்கப்பட்டதால், அதில் செல்லவிருந்த 168 பயணிகள் உள்பட 180 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

இந்த விமானம் இன்று மதியத்துக்கு மேல் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் இருந்து மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் புறப்படத் தயாரானது. இதில் கோலாலம்பூர் செல்ல வேண்டிய 168 பயணிகள், 12 விமான சிப்பந்திகள் உள்பட 180 பேர் விமானத்தில் ஏறி அமர்ந்தனர்.

ஓடுபாதையில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஓடுவதற்கு முன், அதன் இயந்திரங்களை விமானி சரிபார்த்துள்ளார். அதில் இயந்திரக் கோளாறு இருப்பதை கண்டறிந்தார். இதே நிலையில் விமானத்தை இயக்கினால் ஆபத்து என்பதை உணர்ந்த விமானி, இதுகுறித்து விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, விமானத்துக்குள் பொறியாளர்கள் குழு ஏறி, பழுதான இயந்திரங்களை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எனினும், நீண்ட நேரமாகியும் விமானத்தின் பழுதான இயந்திரங்களை சரிசெய்ய முடியவில்லை. இதனால், மலேசியாவுக்கு செல்ல வேண்டிய விமானம் தாமதமாகப் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து, விமானத்தில் இருந்து அனைத்து பயணிகளும் கீழே இறக்கப்பட்டு, சென்னை நகரின் பல்வேறு ஓட்டல்களுக்கு சொகுசு பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டனர்.

பின்னர், இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று மதியத்துக்கு மேல் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், சென்னையில் இருந்து இன்று காலை கோலாலம்பூர் செல்ல வேண்டிய 168 பயணிகள் சென்னையில் பரிதவித்து கொண்டிருக்கின்றனர்.

அதே நேரம், மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை தகுந்த நேரத்தில் விமானி கண்டறிந்து எடுத்த துரித நடவடிக்கையால், அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டு, நல்வாய்ப்பாக 168 பயணிகள் மற்றும் 12 விமான சிப்பந்திகள் என மொத்தம் 180 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதனால் சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு நிலவியது.

The post மலேசியாவுக்குப் புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு: சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article