
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதும், அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதேபோல் சில நாட்களுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பயணி ஒருவரிடம் தீவிர சோதனை செய்தனர்.
இதில் அந்த பயணி தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.