மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அபூர்வ பச்சோந்திகள், கருங்குரங்குகள் கடத்திய 2 பேர் கைது

3 months ago 18

சென்னை: மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அபூர்வ பச்சோந்திகள், கருங்குரங்குகள் கடத்தி வந்த மலேசிய பெண் பயணி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று, சென்னைக்கு நேற்று முன்தினம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை விமானநிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மலேசியாவில் இருந்து பெண் ஒருவர் சுற்றுலா பயணியாக சென்னைக்கு வந்திருந்தார். அவர் 2 பெரிய அளவிலான பிளாஸ்டிக் கூடைகள் வைத்திருந்தார். அதில் என்ன இருக்கிறது என்று சுங்க அதிகாரிகள் கேட்டபோது, சரியான பதில் கூறவில்லை. சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அந்த பெண் பயணியை நிறுத்தி, கூடைகளை திறந்து பார்த்துபோது, ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அபூர்வ வகை உயிரினங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

கூடைகளில் ஆப்பிரிக்க நாட்டு பச்சோந்திகள் 52 உயிருடன் இருந்தன. அதோடு ஜியாமங்க் ஜிப்பான் என்ற ஆப்பிரிக்க நாட்டு கருங்குரங்குகள் 4 இருந்ததை கண்டுபிடித்தனர். பிறகு மலேசிய பெண் பயணியை வெளியில் விடாமல், ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு, பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வனவிலங்குகள் பாதுகாப்பு குற்றப்பிரிவு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து அதிகாரிகள் சென்னை விமான நிலையத்திற்கு விரைந்து வந்து, மலேசிய பெண் பயணியிடம் விசாரித்தனர். அதோடு அவர் கடத்தி வந்த உயிரினங்களையும் ஆய்வு செய்தனர். இந்த உயிரினங்களை வாங்கிச் செல்வதற்காக, சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண், விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் காத்திருப்பது தெரிய வந்தது. அதிகாரிகள் அவரையும் கைது செய்தனர். இந்த உயிரினங்களை, நமது நாட்டுக்குள் அனுமதித்தால் பல்வேறு நோய்க்கிருமிகள், மனிதர்கள் மற்றும் விலங்குகள் பறவைகள் போன்றவற்றுக்கும் பரவிவிடும். மிகவும் ஆபத்தானவை.

எனவே இவற்றை மீண்டும் மலேசியாவுக்கே அதே விமானத்தில், திருப்பி அனுப்பும்படி சுங்கத்துறைக்கு அறிவுறுத்தினர். அதோடு அதற்கான செலவினங்களையும், கடத்தல் பயணி மற்றும் அதை வாங்க வந்திருந்த மற்றொரு கடத்தல் ஆசாமி ஆகியோரிடம் வசூலிக்கவும் கூறினார்கள். அதன்படி சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், நேற்று அதிகாலை சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சென்ற தனியார் பயணிகள் விமானத்தில், இந்த 56 உயிரினங்களையும், மலேசிய நாட்டிற்கே திருப்பி அனுப்பினர். அதோடு மலேசிய பெண் பயணி, இந்த உயிரினங்களை வாங்க வந்திருந்த, ஆண் ஆகிய இருவரையும், சுங்க அதிகாரிகள் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி விசாரணை நடத்தினர். அதன்பின்பு இருவரையும் சென்னை சுங்கத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

The post மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அபூர்வ பச்சோந்திகள், கருங்குரங்குகள் கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article