மலேசியாவில் இருந்து கடத்தி வந்த 5000 சிவப்பு காது ஸ்லைடர் ஆமைகள் பறிமுதல்: சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் அதிரடி

1 month ago 8

சென்னை: மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட சுமார் 5,000 சிவப்பு காது ஸ்லைடர் ஆமைகளை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தல் பயணிகள் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 29ம் தேதி நள்ளிரவு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.

அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சுங்க அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர். அப்போது பெரிய பிளாஸ்டிக் கூடைகளுடன், சென்னையைச் சேர்ந்த 2 ஆண் பயணிகள், சுற்றுலாப் பயணிகளாக, மலேசியா நாட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்தனர். அவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இருவரையும் நிறுத்தி விசாரித்தனர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பேசினர். அவர்கள் வைத்துள்ள பிளாஸ்டிக் குடைகளில் என்ன இருக்கிறது என்று கேட்டனர்.

கூடைகளில் சாக்லேட், பிஸ்கட்டுகள் குழந்தைகள் விளையாடும் டாய்ஸ் இருப்பதாக கூறினர். ஆனாலும் சுங்க அதிகாரிகள், சந்தேகத்தில் கூடைகளை திறந்து பார்த்த போது, உள்ளே உயிருடன் கூடிய சிவப்பு காது ஸ்லைடர் ஆமைகள் ஏராளமாக இருந்தன. இதையத்து இரண்டு பேரையும் சுங்க அலுவலக அறை ஒன்றில் அடைத்து வைத்து விட்டு, சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகள், சென்னை விமான நிலையத்திற்கு வந்து, சிவப்பு காது ஸ்லைடர் ஆமைகளை ஆய்வு செய்தனர். அதில் 4,998 ஆமைகள் இருந்தன. அவைகளில் 12 ஆமைகள் உயிரிழந்து கிடந்தன. மற்ற 19 நட்சத்திர ஆமைகள், ஆல்பினோ சிவப்பு காது நட்சத்திர ஆமைகள் வகையைச் சேர்ந்தது. அதோடு கடத்தல் பயணிகள் இரண்டு பேரிடமும் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது இவர்கள் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் இவைகளை மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வந்தது தெரிந்தது.

இந்த சிவப்பு காது நட்சத்திர ஆமைகள் அனைத்தும் நோய் கிருமிகளுடன் இருக்கலாம். இவைகளை இந்தியாவுக்குள் அனுமதித்தால், வெளிநாட்டு நோய்கள், இங்குள்ள விலங்குகள், பறவைகள் மற்றும் மனிதர்களுக்கு பரவி விடும். அதோடு இந்தியாவில் உள்ள நீர் நிலைகளும் கெட்டுவிடும். எனவே இவைகள் அனைத்தையும், மீண்டும் மலேசிய நாட்டிற்கே, திருப்பி அனுப்ப வேண்டும். அதற்கான செலவுகளை கடத்தல் பயணிகள் இருவரிடமும் வசூலிக்க வேண்டும். கடத்தல் பயணிகள் இருவரையும் சுங்க சட்ட விதிமுறைகள்படி கைது செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

இதையடுத்து சுங்க அதிகாரிகள் உயிருடன் இருந்த 4,986 சிவப்பு காதுகள் ஸ்லைடர் ஆமைகளை நேற்று அதிகாலை, சென்னையில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் சென்ற தனியார் பயணிகள் விமானம் மூலம் திருப்பி அனுப்பினர். அதோடு உயிரிழந்த 12 சிவப்பு காது ஸ்லைடர் ஆமைகளையும், வெளியே எடுத்துச் சென்று, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தீயில் எரித்து அளிக்க முடிவு செய்தனர்.
மேலும் கடத்தல் பயணிகள் இருவரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்து தொடர்ந்து விசாரிக்
கின்றனர்.

The post மலேசியாவில் இருந்து கடத்தி வந்த 5000 சிவப்பு காது ஸ்லைடர் ஆமைகள் பறிமுதல்: சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article