மலராத கட்சியின் புது தலைவர் செயல்பாட்டை பார்த்து பதற்றமாகும் மலையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

4 weeks ago 5

‘‘கொங்குமண்டல லேடியாலயும் புது தலைவரின் செயல்பாட்டாலும் பதறிப்போயிருக்காராமே பழைய மல…’’ என சிரித்தபடி கேட்டுக்கொண்டே வந்தார் பீட்டர் மாமா. ‘‘மலராத கட்சியின் தேசிய லேடி அமைப்பில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் இருக்காராம்.. அவருக்கு மாஜி போலீஸ்காரர் வகித்து வந்த மாநில தலைவர் பதவியை பிடிக்கணுமுன்னு ரொம்பவே ஆசையா இருந்துச்சாம்.. இதற்காக தனது தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் ஆதரவாளர்கள் மூலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் பதவி தனது கைக்கு கிடைக்கலையாம். சட்டசபையில் கட்சி தலைவர் பதவி கொடுக்கல..

எவ்வளவு பெரிய நடிகரையே தோற்கடித்தேன். ஆனால் கட்சி தனக்கான அங்கீகாரத்தை கொடுக்கலன்னு ரொம்பவே வருத்தப்பட்டாராம் அந்த பெண் அரசியல்வாதி.. இவரது புலம்பல் டெல்லி காதில் விழுந்திருக்கு.. இதனால மந்திரி சபை மாற்றத்தின்போது மந்திரியாக்கிடலாமுன்னு ஒரு பேச்சு எழுந்திருக்காம்… இதனை கேள்விப்பட்ட மாஜி போலீஸ்காரரோ ரொம்பவே ஷாக்காயிட்டாராம்… அது நடந்துப்போச்சுன்னா எல்லோரும் தன்னை மறந்திடுவாங்களேன்னு அச்சப்படுறாராம்.

சாதாரண கிராமத்து இலைக்கட்சி தலைவரே சிஎம் ஆகிட்டாரு.. எனது படிப்புக்கு நானும் அந்த இடத்திற்கு வருவேன்னு நினைச்சிதான் அரசியலுக்கு வந்தாராம். ஆனால் தலைவர் பதவியையும் பறிச்சிட்டாங்க.. தன்னைப்போல யாரும் பேமஷாக முடியாதுன்னு இருந்த நேரத்துல அல்வா ஊர்க்காரரான புது தலைவரோ அமைதியா ஆனா வேகமா போறத பார்த்து அதிர்ச்சியாயிட்டாராம். பதவியேற்ற பத்து நாளிலேயே கூட்டணி மந்திரி சபை குறித்து உள்துறை மந்திரி முடிவெடுப்பாருன்னு சொல்லி டெல்லியின் கவனத்தை ஈர்த்துட்டாராம்..

இதே நிலை நீடித்தால் நிரந்தரமாக டெல்லி தன்னை மறந்திடும்.. கோவைக்கார பெண்மணி மந்திரியாகி விட்டால் முற்றிலும் நம்மை மறந்திடுவாங்கன்னு நினைக்கிறாராம்.. கோவையை அவரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு போயிட்டாருன்னா., நினைச்சி பார்க்கவே பயங்கரமாக இருக்கேன்னு அவருக்கு தோணுவதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. இதனால தமிழக அரசியலுக்கு கோவை பெண் முக்கியமுன்னு ெடல்லியில் தனக்கு தெரிந்தவர்களிடம் உரக்கச் சொல்றாராம்..

பல்வேறு தடைகளைத்தாண்டி தனக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்ற ஆசை கனவுடன் வானத்தில் சிறகடித்து பறக்கிறாராம் அந்த பெண் அரசியல்வாதி…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலைகட்சியுடன் மலராத தாமரை கூட்டணியால் சைலன்ட் மோடியில் தேனிக்காரர், குக்கர் கட்சி நிர்வாகிகள் இருக்காங்களாமே..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சிமென்ட் மாவட்டத்தில் தேனிக்காரர் அணியை சேர்ந்த மாவட்ட செயலாளர் மற்றும் குக்கர் கட்சியை சேர்ந்த மாஜி எம்எல்ஏ ஆகியோர் சமீபகாலமாக சைலன்டாகவே இருந்து வருகிறார்களாம்…

இவர்களை பற்றி தலைமையும் பெரிதாக கண்டு கொள்வது கிடையாது. மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகளை கூட சந்தித்து பேசுவது என்பது அபூர்வமாக உள்ளதாம். ஆனால், இருவரும் மட்டும் அடிக்கடி சந்தித்து பேசிக்கிறாங்க. இலை கட்சியில் அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என்பது கூட தெரியாமல் தலைமை இருக்காங்க. இதனால் நாமும் அதே மாதிரி சைலன்டாகவே இருந்து விடுவோம். இலை கட்சியுடன் மலராத தாமரை கூட்டணி வைத்தது பற்றி தேவையில்லாமல் வார்த்தைகள் விட்டு எதற்கு பிரச்னையை சந்திக்க வேண்டும் என இவர்கள் முடிவு செய்திருக்காங்க.

மாவட்டத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள இவர்கள் இருவரும் இப்படி இருந்தால் நிர்வாகிகள் எப்படி இருப்பார்கள் என தொண்டர்களுக்குள்ளே பேசிக்கிறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தாமரைக் கட்சிக்குள் கோஷ்டி மோதல்கள் பெருத்திருச்சாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தாமரைக் கட்சியில் மலையானவர் மாறிப்போனதில், தூங்கா நகர் நிர்வாகிகள் பலர் பெரும் மகிழ்வில் இருந்தாலும், புதிய மாநிலத்தலைமையையும் வரவேற்கத் தயாராயில்லையாம். மலை ஊருக்குள் வந்தால் போஸ்டர் ஒட்டியவர்கள் கூட, புதியவருக்காக இதுவரை ஒரு நோட்டீசும் ஒட்டவில்லை.

இதுபற்றிய தகவலும் மாநில கட்சித் தலைமைக்கு போய் அப்செட் ஆக்கி இருக்கிறதாம். இது ஒருபுறமிருக்க, இந்த மாற்றத்திற்கும் முன்னதாக கட்சி நிர்வாகிகள் பலரும் தூங்கா நகரில் மாற்றப்பட்டு, புதியவர்கள் நியமித்ததிலும் அதிருப்தியில் கோஷ்டிகள் பெருகி விட்டதாம், குறிப்பாக புறநகரின் மேற்குப்புறத்தில் தலைவரானவர் மீது, அக்கட்சியில் பல ஆண்டுகளாக வேலை செய்துவரும் நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனராம். சமீபத்தில் ஒன்றிய கல்விக்கொள்கையை ஆதரித்து முக்கிய பெண் நிர்வாகி வைத்த பிளக்ஸ் பேனரை, கட்சித் தலைமைக்கு நெருக்கமானவரே கிழித்து எறிந்திருக்கிறார்.

இதுகுறித்து புகார்கள் தெரிவித்தும் மாவட்ட தலைமை கண்டுகொள்ளாததும் அதிருப்தியை அதிகரித்துள்ளதாம். தனக்கு நெருக்கமான சிலரை கட்சிப் பொறுப்புகளில் வைக்க முனைப்புக் காட்டுவதும், காலம்தோறும் உழைத்து வருவோருக்கு கசப்பைத் தந்திருக்கிறதாம். இப்படி மாவட்டம் முழுக்க தாமரைக் கட்சியினரிடையே நாளுக்கு நாள் கடும் கோஷ்டி மோதல்கள் அதிகரித்து வருகிறது. ‘நமக்குள்ளதான் ஏகப்பட்ட கோஷ்டின்னா, இந்த சின்ன கட்சிக்காரங்களுக்குள்ளும் இத்தனை கோஷ்டிகளா?’ என்று சமீபத்தில் தாமரையுடன் புதிதாக ஒட்டிக் கொண்டுள்ள இலைக்கட்சியினர் கனத்த கவலையில் இருக்கின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வேறென்ன விவகாரம் இருக்கு..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடைக்கோடி மாவட்டத்தில் நீர் வளத்துறையில் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு இந்த மாதம் இன்னும் சம்பளம் வரலையாம். ஒவ்வொரு மாதமும் 5ம்தேதிக்குள் இவர்களுக்கு சம்பளம் கொடுத்து விடுவார்கள். ஆனால் இயர் என்ட் பிரச்சினையால, ஏப்ரல் மாதம் 20ம் தேதி ஆகியும் ஊதியம் வரல. பலரும் இந்த மாதம் சம்பளம் இல்லாமல், செலவை சமாளிக்க திணறி வருகிறார்களாம். வாடகை, குழந்தைகளுக்கான கல்வி செலவு, மருத்துவ செலவு என பல்வேறு பிரச்சினைகள் இருக்க, 20ம்தேதி வரைக்கும் சம்பளம் போடாமல் அதிகாரிகள் இழுத்தபடிப்பு செய்வதாக பணியாளர்கள் குற்றம் சாட்டி இருக்காங்களாம்.

அதிகாரிகள் கிட்ட கேட்டா, இந்த வருட அலாட்மென்ட் இன்னும் வரல. வந்ததும் கையெழுத்து ஆகி வங்கியில் கிரெடிட் ஆகி விடும் என்று கூலாக பேசுகிறார்களாம். அதிகாரிகளுக்கு 1ம் தேதி ஆனா, சம்பளம் கரெட்டாக கிடைக்குது. கீழ் நிலை ஊழியர்களுக்கு சம்பளத்தை கேட்டு வாங்க அதிகாரிங்க ஆர்வம் காட்டுவது இல்லை என்று பணியாளர்கள் நொந்து போய் தினமும் அலுவலகத்துக்கு வந்த வண்ணம் இருக்காங்களாம். மாவட்ட உயர் அதிகாரி கவனத்துக்கு பெட்டிஷனும் போட்டு உள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

The post மலராத கட்சியின் புது தலைவர் செயல்பாட்டை பார்த்து பதற்றமாகும் மலையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article