மலராத கட்சி கைவிட்டதால் ரகசிய யாகத்தில் குதித்த தந்தை, மகன் பற்றி சொல்கிறார்; wiki யானந்தா

1 week ago 4

‘‘வரும் தேர்தலில் ஏதாவது ஒருதொகுதியில் போட்டிப்போடுவேன் என ‘மணி’ அடிக்கும் அளவுக்கு இலைக்கட்சி மாஜியுடனான தொடர்பால் கோலோச்சிய டிராவல்ஸ் ஏஜென்ட் பற்றி தெரியுமா..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.‘‘மான்செஸ்டர் மாநகரில் டிராவல்ஸ் ஏஜென்ட் ஒருத்தருக்கு கடந்த ஆட்சியில இலைக்கட்சி மாஜி அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் அடிக்கடி வெளிநாடு செல்ல டிக்கெட் வாங்கி கொடுத்தபோது அறிமுகம் ஏற்பட்டதாம்.. இந்த அறிமுகத்தை வைத்து அவர் மாஜியுடன் நெருங்கிய நட்பை உருவாக்கிக் கொண்டாராம்.. பல்வேறு நாடுகளுக்கு மாஜி அமைச்சர் குடும்பத்தினர் ஜாலி டூர் சென்று வர தேவையான உதவிகளை செய்து வந்த நிலையில் மாஜி அமைச்சர் தரப்பினர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செஞ்சாங்க.. அப்போது விஜிலென்ஸ் விசாரணையில், டிராவல்ஸ்காரரும் வசமாக சிக்கினாராம்.. வெளிநாடு டூர் செல்ல டிக்கெட் எடுத்து கொடுத்த கணக்கு மட்டும் 1 கோடி ரூபாய்க்கு மேல் இருக்குமாம்.. இந்த பணத்தை யார் தந்தார்கள் என விஜிலென்ஸ் கிடுக்கிப்பிடி விசாரணை செய்திருக்காங்க.. அதோடு சொத்து குவிப்பில், டிராவல்ஸ்காரரும் ஒரு பினாமியாக இருந்ததும் விசாரணையில் தெரிஞ்சிருக்கு..

இதனால டிராவல்ஸ் ஏஜென்ட் மீதும் வழக்கு பாய்ந்துவிட்டதாம்.. இதில் பயந்து போய் பதுங்கிய டிராவல்ஸ்காரர் நீண்ட காலமாக வெளியே தலைகாட்டாம இருந்து வந்தாராம்.. கட்சிக்காரங்களும் இவரை மறந்திருந்த நிலையில சமீபத்தில் அவர் பெரிய தொழிலதிபராக அவதாரம் எடுத்து வெளியே வலம் வர துவங்கி இருக்கிறாராம்.. அபார்ட்மென்ட், ரியல் எஸ்டேட் என ஏகப்பட்ட தொழில்களை நடத்திட்டு இருக்கிறாராம்.. எல்லாம் பினாமி பணம்தானன்னு பேசிக்கிறாங்க.. தன்னோட செல்வாக்கை பயன்படுத்தி மான்செஸ்டர் மாநகரில் அரசு அதிகாரிகளை வைத்தே பொது நிகழ்ச்சிகளை நடத்துற அளவுக்கு இப்ப கோலோச்சிட்டு இருக்கிறாராம்.. டிராவல்ஸ்காரரின் புது அவதாரத்தை பார்த்து இலைக்கட்சி காரங்களே ‘அவரா இவர்’ என மிரண்டு போய் இருக்கிறார்களாம்.. அதோடு இல்லாம வர்ற எலக்சன்ல மான்செஸ்டரில் ஏதாவது ஒரு தொகுதியில போட்டியிடுவதுதான் தன்னோட இலக்கு அப்படின்னு தன்னோட நெருங்கிய சகாக்களிடம் `மணி’ அடித்து வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தமிழ் பெயர் பலகை விவகாரத்தில் அதிகாரிகளின் செயல்பாடுகளால் வணிகர்கள் அதிருப்தியில் இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘தமிழை பாதுகாக்க திராவிட மாடல் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துக்கிட்டு வருது.. இதற்கு மக்களிடமும் நல்ல வரவேற்பு இருக்கு.. அரசு கோப்புகள் தமிழில், கையெழுத்து தமிழில் என்ற அறிவுறுத்தலோடு வணிகர்கள் தமிழில் பெயர் பலகை வைக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.. இதுபற்றி மாவட்டமும் கூட்டமும் நடத்தி அறிவுரைகள் வழங்கப்பட்டதாம்.. ஆனால் புரம் மாவட்டத்தில் உயர் பதவிகளில் உள்ள அதிகார வர்க்கங்கள் அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு செயல்படுவதாக மக்களிடத்தில் விமர்சனங்கள் எழுந்துக்கிட்டு இருக்கு.. தாங்கள் பயன்படுத்தும் அரசு வாகனங்களில் தமிழுக்கு பதிலாக ஆங்கிலமே இடம்பெற்றுள்ளதாம்.. நகராட்சி ஆணையர்களும் இதில் விதிவிலக்கு இல்லையாம்.. ஊருக்கு உபதேசம் கூறும் கதையாக அதிகாரிகளின் செயல்பாடுகள் உள்ளதால் வணிகர்களிடத்தில் முணுமுணுப்பு பரவலாக நீடிக்கிறதாம்.. முன்மாதிரி காட்ட வேண்டியவர்களே இப்படி இருக்கலாமா என்ற கேள்வி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையிலும் சென்றுள்ளதாம்.. இதுபற்றிதான் புரம் மாவட்டத்தில் பரவலாக பேச்சு..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஜோசியர்கள் ஐடியா கொடுத்து மீண்டும் அரசியலில் ஜொலிக்க பலாப்பழக்காரர் ரகசிய யாகம் நடத்தினாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மலராத கட்சி தலைமையின் தயவால் எப்படியும் மீண்டும் இலைக்கட்சியில் சேர்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் பலாப்பழக்காரர் இருந்தார். ஆனால், பலாப்பழக்காரரின் ஆசை தற்போதைக்கு நிறைவேறாத வகையில், சேலத்துக்காரர் மலராத கட்சி தலைமையுடன் ஸ்ட்ராங் அக்ரிமெண்ட் போட்டு விட்டார். இதனால் பலாப்பழக்காரர் ரொம்பவே விரக்தி நிலையில் இருக்கிறாராம். தனது அரசியல் எதிரிகளை வீழ்த்தவும், இழந்த பதவிகளை மீண்டும் பெற வேண்டுமென்றால் யாகம் நடத்த வேண்டுமென ஜோசியர்கள் அவருக்கு ஐடியா கொடுத்துள்ளனராம்.. இதை ெதாடர்ந்து கடலோர மாவட்டத்தில் உள்ள புனித தலத்துக்கு மகன் மற்றும் நெருக்கமானவர்களுடன் கடந்த வாரம் சென்றாராம்.. கடல், கோயில் தீர்த்தங்களில் புனித நீராடி விட்டு, தனி மண்டபத்தில் ரகசிய யாகமும் நடத்தியுள்ளாராம்.. இந்த யாக மேட்டர் கடலோர மாவட்டத்தில் உள்ள இவரது நெருங்கிய ஆதரவாளர்களுக்கு கூட தெரியாத அளவு கச்சிமாக நடந்து முடிந்திருக்கு.. வழக்கமான யாகம்தான் என அவரது தரப்பில் கூறினாலும், அப்படியென்றால் ஏன் ரகசிய யாகம் நடத்த வேண்டுமென்ற பேச்சும் ஓடுகிறதாம்.. யாகம் இவருக்கு யோகம் தருமா என அவரது ஆதரவாளர்களும் ஆவலோடு வெயிட்டிங்கில் இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கூட்டணி கணக்கில் கட்சிகள் ஒவ்வொன்றும் கவனம் செலுத்தும் நிலையில், அணையான தொகுதிக்கு பலமான ஆளை தேடிக்கிட்டு இருக்காங்களாமே மாங்கனி கட்சியில்..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வரும் சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் கூட்டணி கணக்குல கவனம் செலுத்தி வர்றாங்க.. இதுல மலராத கட்சியும், இலைக்கட்சியும் அந்த கட்சிகளின் தொண்டர்களின் விருப்பமில்லாமலேயே கூட்டணி சேர்ந்து, முதல் கோணல், முற்றும் கோணலான கதையாக இருக்குது.. கடந்த தேர்தல்ல அந்த கூட்டணியில இருந்த மற்ற கட்சிகள்ல முரசு, மாங்கனியும், இப்போ நடிகரின் பக்கம் தாவலாமா, இல்லை மலராத கட்சி பக்கம் தாவலாமா என்ற யோசனையில இருக்குறாங்களாம்.. இந்த முறை யாரு கூட கூட்டணி வெச்சாலும், அணையான தொகுதியை பெற்றே தீருவோம்னு மாங்கனி கட்சி உறுதியாக உள்ளதாம்.. ஆனா, அந்த உறுதி கீழ்மட்டத்துல இல்லையாம்.. அணையான தொகுதியில ஏற்கனவே போட்டியிட்டவரு, சொந்த ஊர் தொகுதியில கண்ணாக இருக்குறாராம்.. அதனால, இங்க செலவு செஞ்சி போட்டியிடக்கூடிய நிலையில யாரும் இல்லையாம்.. இதனால் அங்கு போட்டியிட ‘பல’மான ஆளை தேடி வருகிறதாம் மாங்கனி கட்சி..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

 

The post மலராத கட்சி கைவிட்டதால் ரகசிய யாகத்தில் குதித்த தந்தை, மகன் பற்றி சொல்கிறார்; wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article