
சென்னை,
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர்கான். தற்போது இவர் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்துள்ளார். அதன்படி இவர் தயாரிக்கும் படம் 'லாகூர் 1947'. ராஜ்குமார் சந்தோஷி இயக்கும் இப்படத்தில் சன்னி திவோல் கதாநாயகனாக நடிக்க பிரீத்தி ஜிந்தா கதாநாயகியாக நடிக்கிறார்.
இதனைத்தொடர்ந்து, அமீர்கான் கதாநாயகனாக நடித்து வரும் படம் 'சித்தாரே ஜமீன் பர்'. இப்படத்தை ஆர்.எஸ்.பிரசன்னா இயக்குகிறார். இந்நிலையில், அமீர்கான் அடுத்ததாக மறைந்த நடிகரும், இசையமைப்பாளருமான கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அனுராக் பாசு இயக்க உள்ள இப்படத்தில் முன்னதாக ரன்பீர் கபூர் நடிப்பதாக தகவல் வெளியானநிலையில், தற்போது இயக்குனர் அமீர்கானிடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அனுராக் பாசு தற்போது கார்த்திக் ஆர்யன் மற்றும் திரிப்தி டிம்ரி நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.