பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் (சரசயனம்) கிடக்கிறார். பாண்டவர்கள் கண்ணீரோடு நிற்கிறார்கள். பீஷ்மர் பாண்டவர்களுக்குச் சொன்ன ஓர் அறிவுரையைப் படித்ததும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் ஓர் அருமையான பொன்மொழி நினைவுக்கு வந்தது.பீஷ்மர் பாண்டவர்களுக்குச் சொன்ன அறிவுரை இது:
“நம்மைக் காரணமின்றி நிந்திப்பவர்கள் நமது பாவத்தில் ஒரு பங்கு எடுத்துக்கொள்கிறார்கள். அவ்வாறு எடுத்துக் கொள்வதன்றி அவர்கள் செய்த புண்ணியத்தில் ஒரு பங்கு நமக்குத் தருகிறார்கள்.”ஒரு முறை நபிகளார்(ஸல்) தம் தோழர்களைப் பார்த்து, “திவால்- போண்டி ஆனவன் யார் தெரியுமா?” என்று கேட்டார்.“யாரிடம் தங்கமோ வெள்ளியோ பணம் காசோ இல்லையோ அவன்தான் போண்டி” என்றனர் தோழர்கள்.நபிகளார்(ஸல்) கூறினார்:“இல்லை. மறுமையில் ஒருவன் இறை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவான்.“அவனிடம் தொழுகை, நோன்பு, தான தர்மங்கள் என ஏராளமான நன்மைகள் மலைபோல் குவிந்திருக்கும். அத்தனை புண்ணியங்களோடுதான் இறைவன் முன் வந்து நிற்பான்.“ஆனால் அதே சமயம் அவன் சிலரைத் திட்டியிருப்பான்; சிலர் மீது அவதூறு கூறியிருப்பான்; மற்றவர்களின் சொத்தை அநியாயமாக விழுங்கியிருப்பான்; பிறரின் இரத்தத்தை ஓட்டியிருப்பான்; பிறரை அடித்திருப்பான்.“அவனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பாதிப்புக்கு ஏற்ப அவனிடமிருந்த நன்மைகளை இறைவன் எடுத்துக் கொடுப்பான்.“இப்படிக் கொடுத்துக் கொடுத்து அவனுடைய மலைபோன்ற நன்மைகள் – புண்ணியங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்.“ஆயினும் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் இருப்பார்கள்.’’
“இப்போது என்ன செய்வது? பாதிக்கப்பட்டவர்களின் பாவங்கள் அவன் கணக்கில் எழுதப்பட்டு, இறுதியில் நரகில் வீசப்படுவான். இவன்தான் உண்மையில் திவால்- போண்டி ஆனவன்.”மலையளவு நற்செயல்கள்- புண்ணியங்களோடு இறைவனின் திருமுன் வந்தவன், தன் நாவைக் கட்டுப்படுத்தத் தவறியதால், அனைத்தையும் இழந்து போண்டி ஆகி நரகில் வீழ்ந்தான்.நமது அன்றாட வாழ்வில் – வீட்டில், அலுவலகத்தில், பணிமனைகளில், வணிகத் தலங்களில், கொடுக்கல்- வாங்கல்களில், ஏன் சமூக ஊடகங்களில்கூட நல்ல வார்த்தைகளையே, கண்ணியமான சொற்களையே பயன்படுத்துவோம்.பிறரைக் காயப்படுத்தாமல் கருத்து களைச் சொல்லப் பழகிக்கொள்வோம்.‘நம்மைக் காரணமின்றி நிந்திப்பவர்கள், திட்டியவர்கள், வசை பாடியவர்கள் தங்களின் புண்ணியங்களிலிருந்து ஒரு பங்கை நமக்குத் தருகிறார்கள்” எனும் பீஷ்மரின் அறிவுரைக்கு விரிவுரை எழுதியது போல் இந்த நபிமொழி
அமைந்திருக்கிறது அல்லவா?
மக்களின் உரிமைகளை வழங்கி, அடுத்தவர் மனங்களைப் புண்படுத்தாமல் வாழ்தலே சிறப்பாகும்.இந்த உண்மையை உள்ளத்தில் இருத்தி, உலகில் வாழ்ந்தால், நாம் பாடுபட்டுச் சேர்த்த புண்ணியங்கள் மறுமையில் பறிபோகாமல் இருக்கும்.இல்லையேல் – மறுமையில் போண்டிகள்தாம்.
– சிராஜுல் ஹஸன்.
The post மறுமையின் போண்டிகள் appeared first on Dinakaran.