நெல்லை: மறு அறிவிப்பு வரும் வரை செங்கோட்டை – சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் தாம்பரம் வரை மட்டுமே செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற தொடங்கியுள்ளது. இதையொட்டி சில ரயில்கள் எழும்பூருக்கு செல்லாமல், தாம்பரத்திலேயே நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி வரும் 21ம் தேதி முதல் செங்கோட்டை – சென்னை இடையே இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் (எண்.20682) தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். அந்த ரயில் செங்கோட்டையில் இருந்து வழக்கமான நேரத்தில் புறப்பட்டு, தாம்பரத்திற்கு அதிகாலை 4.25 மணிக்கு வந்து சேரும். மறுமார்க்கத்தில் அதே ரயில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.55 மணிக்கு புறப்பட்டு, வழக்கமான நேரத்தில் செங்ேகாட்டை போய் சேரும்.
இதுபோல் நெல்லை வழியாக இயக்கப்படும் நாகர்கோவில் – சென்னை எழும்பூர் வாராந்திர எக்ஸ்பிரசும் (எண்.12668) வரும் 22ம் தேதி தொடங்கி மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் தாம்பரத்திற்கு அதிகாலை 4.15 மணிக்கு போய் சேரும். மறுமார்க்கமாக இரவு 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, நாகர்கோவிலுக்கு வழக்கமான நேரத்திற்கு போய் சேரும். சென்னை எழும்பூர்- ஜோத்பூர் ரயிலும், இனி தாம்பரத்தில் இருந்தே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
The post மறு அறிவிப்பு வரும் வரை சிலம்பு எக்ஸ்பிரஸ் தாம்பரம் வரை மட்டுமே செல்லும் appeared first on Dinakaran.