கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்கார கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பணியாற்றிய 11 போலீஸ்காரர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளதால், மேல்முறையீட்டு வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் 9ம் தேதி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் முதுநிலை பயிற்சி மருத்துவர் (31), பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக போலீஸ் தன்னார்வலர் சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணையை கொல்கத்தா போலீஸிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மருத்துவரின் படுகொலையைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் நடந்தன. நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை இச்சம்பவம் ஏற்படுத்தியது. கடந்த ஜனவரி மாதம், மேற்படி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த விசாரணை நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. சிபிஐ தரப்பிலும் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் பணியில் இருந்த 11 போலீசாருக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது. சம்பவம் நடந்த நாளில் மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ள புறக்காவல் நிலையத்தில் அப்போது பணியில் இருந்த தாலா காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர்கள், உதவி துணை ஆய்வாளர்கள் மற்றும் கான்ஸ்டபிள்கள் என 11 பேரும் இன்றும், நாளையும் சி.ஜி.ஓ வளாகத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மனில் கூறப்பட்டுள்ளது. சி.பி.ஐ தரப்பில், இந்த வாரம் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
The post மருத்துவர் பலாத்கார கொலை வழக்கு; 11 போலீஸ்காரர்களுக்கு சிபிஐ சம்மன்: மேல்முறையீட்டு வழக்கில் திருப்பம் appeared first on Dinakaran.