சென்னை: மருத்துவப் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 621 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (4.4.2025) தலைமைச் செயலகத்தில், பால்வளத்துறை சார்பில் 64 நபர்களுக்கும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் 166 நபர்களுக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 391 நபர்களுக்கும், என மொத்தம் 621 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட வர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 13 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், 40,000 பணியிடங்கள் நடப்பு நிதி ஆண்டிலேயே நிரப்பும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொள்ளும் என்ற அறிவிப்பிற்கிணங்க, முதலமைச்சர் இன்றைய தினம் 621 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். பால்வளத் துறையில் பணிநியமன ஆணைகள் கால்நடை பராமரிப்பு. பால்வளம். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், ஆவின் நிறுவனத்தில் சிறப்பான முறையில் வெளிப்படைத் தன்மையுடன் பணி நியமனம் செய்வதற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த மே 2021 முதல் இதுவரை, செயற்பணியாளர் (கட்டுமானம்) பதவிக்கு 3 நபர்களும், மேலாளர் (கால்நடை மருத்துவம்) பதவிக்கு 23 நபர்களும், மேலாளர் (நிதி) பதவிக்கு 13 நபர்களும், மேலாளர் (பொறியியல்) பதவிக்கு 7 நபர்களும், மேலாளர் (கட்டுமானம்) பதவிக்கு 1 நபரும், என மொத்தம் 47 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணியாற்றிட பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரிந்து வெவ்வேறு காலக்கட்டங்களில் உயிர்நீத்த 64 பணியாளர்களின் சட்டப்பூர்வமான வாரிசுதார்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை செயற்பணியாளர் (அலுவலகம்) மற்றும் முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் பதவிகளில் பணியாற்றிட பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை மொத்தம் 111 நபர்கள் பணிநியமன ஆணைகள் பெற்று பயனடைந்துள்ளனர்.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட 64 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் பால்வளத் துறை சார்பில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரிந்திட தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக இளநிலை செயற்பணியாளர் (அலுவலகம்) பணியிடத்திற்கு 29 நபர்கள், பால் அளவையாளர் நிலை-III பணியிடத்திற்கு 11 நபர்கள் மற்றும் முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் பணியிடத்திற்கு 24 நபர்கள், என மொத்தம் 64 நபர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் 3 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் பணிநியமன ஆணைகள் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை பிரிவில் பணி ஓய்வின் காரணமாக நிலவும் பணியாளர்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யவும், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் கைத்தறி இரகங்களின் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கிலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 90 ஆண் பணியாளர்கள் மற்றும் 76 பெண் பணியாளர்கள், என மொத்தம் 166 உதவி விற்பனையாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பணிநியமன ஆணைகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்களை இவ்வரசு உடனுக்குடன் நிரப்பி வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக மருந்தாளுநர்கள். உதவி மருத்துவர் (பொது). உதவி மருத்துவர் (சிறப்பு தேர்வு). ஆய்வக நுட்புநர், இருட்டறை உதவியாளர். களப்பணி உதவியாளர், இரத்த சுத்திகரிப்பு தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தம் 7346 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக இளநிலை உதவியாளர், உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து-தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு மொத்தம் 1393 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப் பட்டுள்ளது. அத்துடன் கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கு 133 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை 8872 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட 391 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 74 இ.சி.ஜி. தொழில்நுட்ப வல்லுநர் பணியிடத்திற்கும், 44 இயன்முறை சிகிச்சையாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட வர்களுக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 205 இளநிலை உதவியாளர் மற்றும் 68 தட்டச்சர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் இன்றையதினம் 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப., கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை செயலாளர். வே. அமுதவல்லி, இ.ஆ.ப., கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைச் செயலாளர் மருத்துவர் ந.சுப்பையன், இ.ஆ.ப., பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையர் / ஆவின் நிர்வாக இயக்குநர் ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப., கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மருத்துவப் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 621 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.