4 ஆண்டு சாதனையை பொறுக்க முடியாமல் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதா?: எடப்பாடிக்கு காங்கிரஸ் எஸ்சி பிரிவு கண்டனம்

8 hours ago 2

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறை மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் வெளியிட்ட அறிக்கை: விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தோழி விடுதி, மகளிர் சுய உதவிக்குழு என பெண்கள் தலைநிமிர்ந்து சுயசார்புடன் வாழ வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பணியாற்றும் பெண்களில், நாட்டிலேயே முதல் இடத்தில் இருப்பது தமிழ்நாடு தான். இப்படி, யாரையும் நம்பாமல் சொந்தக் காலில் நிற்க முடியும் என்ற நம்பிக்கையைப் பெண்களுக்கு ஏற்படுத்திய பெருமை முதல்வர் மு.க.ஸ்டாலினையே சாரும்.

இதையெல்லாம் ஜீரணிக்க முடியாத எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார். திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனையைப் பொறுத்துக் கொள்ள முடியாத எடப்பாடி பழனிசாமி, பித்தம் தெளிய எதை தின்பது என்ற குழப்பத்தில் உளறுகிறார். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கு இதுவரை பதில் சொல்லாத எடப்பாடிக்கு, திமுக அரசைக் குறைகூற என்ன தகுதி இருக்கிறது?.

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தின் பழங்குடியின பெண்கள் மீது பாலியல் வன்புணர்வும், தாக்குதலும் காவல் துறையினரால் நடத்தப்பட்டது. அப்போது எங்கே போனார் எடப்பாடி?. பாஜ ஆளும் மாநிலங்களில் பட்டியலின பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிக அளவில் நடப்பது, இந்திய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட தரவுகளில் தெரியவந்துள்ளது. இதற்கு இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன்?. நீங்கள் கேள்வி கேட்க வேண்டியது தமிழ்நாடு அரசை அல்ல. பாஜ அரசைத் தான். தைரியம் இருக்கிறதா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 4 ஆண்டு சாதனையை பொறுக்க முடியாமல் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதா?: எடப்பாடிக்கு காங்கிரஸ் எஸ்சி பிரிவு கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article