சென்னை: கன்னியாகுமரி எம்பி விஜய்வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: பாராளுமன்றத்தில் பட்ஜெட்டில் சுகாதாரத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கிய போதிலும் தேசத்தின் சுகாதார மேம்பாட்டிற்கு போதுமானதாக இல்லை. நாட்டின் வளர்ச்சி விகிதத்தின் 10 சதவிகிதம் சுகாதார மேம்பாட்டிற்கு ஒதுக்கவேண்டிய நிலையில் அரசு வெறும் 2 சதவிகிதம் மட்டுமே ஒதுக்கியுள்ளது. உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் போதிய நிதியினை அரசு ஒதுக்கவில்லை. இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.
1000 நபர்களுக்கு ஒரு மருத்துவர் தேவை என்ற வழிகாட்டுதலைவிட குறைவாக 1500 இந்தியர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை உள்ளது. கிராமப்புற மருத்துவமனைகளில் 1/4 பங்கு காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இந்தியாவின் 50 சதவிகிதம் மருத்துவமனைகளில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. கோவிட் காலகட்டத்தில் நமது மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து நாம் கண்டறிந்தோம்.
அது போன்ற ஒரு இடரை எதிர்கொள்ள நமது நாட்டில் மருத்துவ வசதிகளை மேம்படுத்தி நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். இந்தியர்களின் மருத்துவ செலவில் 62 சதவிகிதம் தங்கள் சொந்த காசில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நமது மக்கள் உள்ளனர். ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டியது அரசின் கடமை. இவற்றை குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என கோரி ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்துள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.
The post மருத்துவ வசதிகளை மேம்படுத்த பாராளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும்: விஜய் வசந்த் எம்பி வலியுறுத்தல் appeared first on Dinakaran.