மருத்துவ மாணவர்களின் வைப்பு தொகையை வங்கி கணக்குகளில் உடனடியாக வரவு வைக்க நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

2 hours ago 1

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தாண்டிற்கான மருத்துவ சேர்க்கை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி 2 மாதங்களில் முடிந்துவிட்டது. மாணவர் சேர்க்கை கவுன்சிலில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர் அரசு ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பத்துடன் ரூ.30,000 வைப்பு தொகையும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு ரூ.ஒரு லட்சம் வைப்பு தொகையும் செலுத்தினர். 3ம் கட்ட கவுன்சிலிங் முடிந்தும் நிரம்பாத இடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் ரூ. 5 லட்சம் வைப்பு தொகை கட்டினர். வழக்கமாக கவுன்சிலிங் முடிந்து ஓரிரு மாதங்களில் தொடர்புடையவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஆனால் இந்தாண்டு 5,6 மாதங்களாகியும் வைப்பு தொகை திருப்பி தரப்படவில்லை. இந்த தொகையை கல்லூரி கட்டணத்தில் கழித்து கொள்ளவும் நிர்வாகம் மறுக்கிறது என்று பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மருத்துவ கல்லூரி இயக்குநரகத்தில் கேட்டால், நிதி பற்றாக்குறை காரணமாக வைப்பு தொகையை திருப்பி அளிக்க முடியவில்லை என்றும், விரைவில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தி, வைப்பு தொகையை மாணவர்களின் வங்கி கணக்கில் உடனடியாக வரவு வைக்க நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

The post மருத்துவ மாணவர்களின் வைப்பு தொகையை வங்கி கணக்குகளில் உடனடியாக வரவு வைக்க நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article