தமிழகத்தில் பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுவோரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்ட குற்றவாளிகள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபசார தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசை பகுதி நில அபகரிப்பாளர்கள் மற்றும் காணொலி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளை தடுத்தல் சட்டம் 1982-ன் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள் என்றும், இந்த சட்டம் அதற்கேற்றபடி திருத்தப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் உயிரி- மருத்துவக் கழிவுகளை (பயோ மெடிக்கல் வேஸ்ட்) முறையற்று குவித்து பொது சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் கடும் அபாயத்தை ஏற்படுத்துவோரையும் இந்த சட்டத்தில் இணைத்து அவர்கள் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் மசோதாவை சட்டப் பேரவையில் அமைச்சர் ரகுபதி சமீபத்தில் அறிமுகம் செய்திருந்தார். இந்த மசோதா மீது சட்டப் பேரவையில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் பேசிய அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம், மாநில எல்லைப் பகுதிகளில் குறிப்பாக கேரளாவில் இருந்து இதுபோன்ற கழிவுகள் இங்கே கொட்டப்படுகின்றன. இந்த சட்டத்தை அமல்படுத்தும் துறை பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ பாலாஜி, ஆபத்தை விளைவிக்கும் கழிவுகளையும் இந்த மசோதாவில் இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அவர்களுக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் முத்துசாமி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தான் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. தேவைப்பட்டால் மற்ற துறைகளுடன் இணைந்து செயல்படும். எம்எல்ஏக்கள் கொடுத்த ஆலோசனைகளையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். பின்னர் அந்த மசோதா, குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
The post மருத்துவ கழிவுகள் கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை: மசோதா நிறைவேற்றம் appeared first on Dinakaran.