
மும்பை,
மராட்டியத்தின் மும்பை புறநகரில் உள்ள பந்தூப் என்ற பகுதியில் சாய் ராதே என்ற பெயரிலான கட்டிடத்தில் வசித்து வந்த பெண் ஒருவர் ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்துள்ளார். பீட்சா கொண்டு வந்த ஊழியர் ரோகித் லவாரே, அதனை கொடுப்பதற்காக கதவை தட்டியுள்ளார்.
உள்ளே இருந்த பெண், இரும்பு கதவின் பின்னால் இருந்து கொண்டு ஊழியரிடம், மராத்தியில் பேசு. அப்போதுதான் பணம் கிடைக்கும் என்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த, பீட்சா டெலிவரி செய்ய வந்த ஊழியர் லவாரே, மராத்தியில் பேச வேண்டும் என்பது கட்டாயமா? ஆனால் ஏன்? என்றார். அதற்கு அந்த பெண்ணோ, ஆமாம். பேசித்தான் ஆக வேண்டும் என பதிலளித்து உள்ளார். இதற்கு லவாரே, யார் இதனை கூறினார்கள் என கேட்டார்.
இதுவே உங்களுடைய முன் நிபந்தனை என்றால், நீங்கள் ஆர்டரே செய்திருக்க கூடாது. நீங்கள் பணம் செலுத்த விரும்பவில்லை. அப்படித்தானே? என்றார். இருவருக்கு இடையேயான இந்த உரையாடலை லவாரே வீடியோவாக படம் பிடித்து உள்ளார்.
அதற்கு அந்த பெண், நீங்கள் என்னை வீடியோ எடுக்க முடியாது. ஆனால், நான் வீடியோ எடுப்பேன் என்றார். உடனடியாக லவாரே, இது என்ன மாதிரியான கட்டாயம்? என்றார். அப்போது, அவருக்கு அருகே நின்றிருந்த ஆண், கதவை மூட முயன்றார். அப்போது லவாரே, நீங்கள் ஆர்டர் செய்த உணவு கெட்டு போய் விட்டதா? என எனக்கு காண்பியுங்கள் என்று கூறினார்.
இந்த உரையாடலில் முடிவு எதுவும் ஏற்படவில்லை. பணம் வாங்காமலேயே அவர் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த விசயத்தில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி, உணவு வழங்கிய நிறுவனமே முடிவு செய்ய உள்ளது. பீட்சா ஆர்டர் செய்த பெண் ஒருவர், மராத்தியில் பேச வேண்டும் என ஊழியரை கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை முன்பே ஆர்டர் செய்யும்போது குறிப்பிட்டிருந்தால், தேவையில்லாத விசயங்கள் நடந்திருக்காது. ஊழியரின் தேவையற்ற அலைச்சலும் தவிர்க்கப்பட்டு இருக்கும்.