
மும்பை,
நவநிர்மாண் சேனா கட்சியினர் வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் மராத்தியில் பேச வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக நேற்று தானே மற்றும் புனே மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு சென்று மேலாளரிடம் மராத்தி மொழியில் பேசவேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.
மேலும் ஊழியர் ஒருவரையும் தாக்கினர். அதேபோல தனியார் வங்கி ஒன்றில் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டு இருந்த பெயர் பலகைகளை அகற்றினர். இவர்கள் நடவடிக்கைகள் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று கூறியதாவது, "மராத்தி மொழியை பயன்படுத்த வலியுறுத்துவது தவறில்லை. ஆனால் அவ்வாறு செய்யும் போது யாராவது சட்டத்தை கையில் எடுத்தால், அது பொறுத்துக்கொள்ளப்படாது. இவ்வாறு அத்துமீறி நடந்துகொண்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.