
சென்னை,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 16 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் பஞ்சாப், டெல்லி, பெங்களூரு, குஜராத் அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதில் மாலை 3.30 மணிக்கு சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான பதிரனா சென்னை அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனியை, தன் கிரிக்கெட் தந்தையாக கருதுவதாக கூறி புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
தோனி எனக்கு தந்தை மாதிரி. ஏனெனில் சென்னை அணியில் நான் இணைந்த பிறகு அவர் எனக்கு எல்லா வகையிலும் பக்கபலமாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார். வீட்டில் எனக்கு எனது தந்தை என்ன செய்தாரோ அதை தோனி கிரிக்கெட்டில் செய்கிறார். அதனால் தான் தோனியை, என் கிரிக்கெட் தந்தையாக கருதுகிறேன்.
முதல்முறையாக தோனியை சந்தித்த போது அவர் என்னை பார்த்து, 'ஹாய்... மாலி எப்படி இருக்கிறீர்கள்' என்று கேட்டார். இலங்கையில் 'மாலி' என்பதற்கு இளைய சகோதரர் என்ற அர்த்தமும் உண்டு. தோனி போன்ற ஜாம்பவான் என்னை 'மாலி' என்று அழைத்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.