மராட்டியம்: காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இன்று தொகுதி உடன்பாடு?

3 months ago 21

மும்பை,

மராட்டியத்தில் ஆளும் மகாயுதி கூட்டணி, எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று பா.ஜனதா முதல்கட்டமாக 99 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது.

ஆனால் மறுபுறம் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து ஒருமித்த கருத்து ஏற்படாத நிலை நிலவுகிறது. தொகுதி பங்கீட்டில் உள்ள முட்டுக்கட்டைகளை களைய காங்கிரஸ், உத்தவ் சிவசேனா கட்சியின் தலைவர்கள் தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) கட்சி தலைவர் சரத்பவாரை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

மும்பையில் உள்ள சரத்பவாரின் கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் நசீம்கான், உத்தவ் சிவசேனாவை சேர்ந்த ஆதித்ய தாக்கரே, சஞ்சய் ராவத் கலந்து கொண்டனர். மேலும் தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) மூத்த தலைவர் அனில்தேஷ்முக் உடன் இருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ளனர். அதற்கு மத்தியில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

அதிக இழுபறி உள்ள 10 முதல் 12 தொகுதிகளில் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள எந்த கட்சியால் சிறந்த வேட்பாளரை வழங்க முடியும் என்பது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒருமித்த கருத்து எட்டியபிறகு ஓரிரு நாளில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என மகா விகாஸ் அகாடி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் நசீம்கான் கூறுகையில், "10 சதவீத இடங்களில் கூட்டணி கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்க இந்த ஆலோசனை நடைபெற்றது. மகா விகாஸ் அகாடி கூட்டணியை கட்டி எழுப்பியவர் சரத்பவார் என்பதால், அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினோம்" என்றார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இன்று தொகுதி உடன்பாடு ஏற்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Read Entire Article