
மும்பை,
மராட்டியத்தில் அமராவதி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலின்படி,
மராட்டிய மாநிலத்தின் அமராவதியில் இன்று பிற்பகல் 1.37-க்கு ரிக்டர் அளவில் 4.2 அளவில் லேசான நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தினால் உயிரிழப்போ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை என்று அமராவதி துணை கலெக்டர் அனில் பட்கர் தெரிவித்துள்ளார்.
சிக்கல்தாரா, கட்கும்ப், சுர்னி, பச்டோங்ரி தாலுக்காக்கள் மற்றும் மேல்காட் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். சில இடங்களில் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறினர். மாவட்டத்தின் பரத்வாடா நகரின் சில பகுதிகளிலும், அகோட் பகுதிகளில் உள்ள தர்னியிலும் லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டதாக அனில் பட்கர் கூறியுள்ளார்.