சென்னை: மரபணு பாதிப்பு ஏற்பட்ட 12 வயதான சிறுமிக்கு தசைப்பகுதி நீக்க அறுவை சிகிச்சையை காவேரி மருத்துவமனை வெற்றிகரமாக செய்துள்ளது. 12 வயதான சிறுமிக்கு ஹைப்பர்டிராஃபிக் அடைப்புள்ள இதய தசைநோய் என்ற மரபணு பாதிப்பு இருந்துள்ளது. இது வயது வந்த பெரியவர்களிடம் அதிகளவு காணப்படுகிற போதிலும் குழந்தைகளுக்கு இப்பாதிப்பு ஏற்படுவது மிகவும் அரிதானது. குறிப்பாக சிறுமியை பொறுத்தவரை பெருநாடி வால்வுக்கு கீழே ஒரு அரிதான திசு வளர்ச்சியும் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக இந்த சிறுமியின் பாதிப்புநிலை சிக்கலானதாக மாறியிருந்தது. மயக்கமடைதல், மார்புவலி மற்றும் திடீரென இதய செயலிழப்பு போன்ற அறிகுறிகளோடு இச்சிறுமியின் உயிருக்கு தீவிரமான இடர்வாய்ப்பையும் ஏற்படுத்துவதாக இப்பாதிப்பு நிலை இருந்தது.
காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இந்த சிறுமி அழைத்துவரப்பட்டு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டன.
தடித்திருந்த இதயத்தசையை அகற்றவும் மற்றும் பெருநாடிக்கு கீழே உள்ள மென்படலத்தை வெட்டி நீக்கவும் சிக்கலான ‘இடைச்சுவர் தசைப்பகுதி நீக்கம்’ என்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் குழு முடிவு செய்து, அது வெற்றிகரமாக அகற்றப்பட்டது. அறுவைசிகிச்சை முடிந்த 48 மணி நேரத்துக்குள் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து வார்டுக்கு மாற்றப்பட்ட இச்சிறுமி சிறப்பாக உடல்நலம் தேறியுள்ளார்.
இதுதொடர்பாக காவேரி மருத்துவமனை டாக்டர் அன்பரசு கூறியதாவது: இச்சிறுமி புன்னகை மலர இப்போது சிரிப்பதும், ஒரு மருத்துவராக ஆகவேண்டுமென்ற தனது கனவு பற்றி நம்பிக்கையுடன் பேசுவதையும் கேட்பதும் எங்களது பணி குறித்து அதிக மனதிருப்தியையும், மகிழ்ச்சியையும் எங்களுக்கு தருவதாக இருக்கிறது. குணமடைந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு இச் சிறுமி திரும்பிச் செல்லும் தருணத்தில் அவரது கனவுகளும், விருப்பங்களும் நிஜமாக நிறைவேற மனமார வாழ்த்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post மரபணு பாதிப்பு ஏற்பட்ட சிறுமிக்கு இதய தசைப்பகுதி நீக்க அறுவை சிகிச்சை: காவேரி மருத்துவமனை தகவல் appeared first on Dinakaran.