மரக்காணம் பகுதியில் தொடர் மழை பக்கிங்காம் கால்வாய் நீர் புகுந்ததால் உப்பு உற்பத்தி அடியோடு பாதிப்பு: தொழிலாளர்கள் கவலை

1 week ago 2

 

மரக்காணம், நவ. 8: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சொந்தமாக சுமார் 3500 பரப்பளவில் உப்பளங்கள் உள்ளது. இப்பகுதியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் துவங்கும் உப்பு உற்பத்தியானது, தொடர்ந்து அக்டோபர் மாதம் வரையில் நடைபெறும். இங்கு ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

இத்தொழிலை நம்பி இங்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இப்பகுதியில் பொது மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய எந்த ஒரு தொழிற்சாலையும் இல்லை. இதன் காரணமாக இங்கு உப்பு தொழிலே பிரதான தொழிலாக விளங்குகிறது.இந்நிலையில் இப்பகுதியில் கடந்த சில வாரங்களாக விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது. இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதியில் பருவ மழை பெய்ய துவங்கி உள்ளது.

இதுபோல் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மாறுபட்ட நீரோட்டத்தின் காரணமாக கடல் நீரானது முகத்துவாரம் வழியாக பக்கிங்காம் கால்வாய்க்கு வருகிறது. இதன் காரணமாக பக்கிங்காம் கால்வாயில் உள்ள அதிகப்படியான நீரானது, அருகிலுள்ள உப்பளங்களில் புகுந்து விட்டது. இதுபோல் தொடர்ந்து பக்கிங்காம் கால்வாயில் இருந்து தண்ணீர் புகுவதால் உப்பளங்கள் முற்றிலும் நீரில் மூழ்கி தற்போது ஏரி போல் காட்சியளிக்கிறது.

இப்பகுதியில் உப்பளங்கள் நீரில் மூழ்கி உப்பு தொழில் அடியோடு பாதிக்கப்பட்டதால் இந்தத் தொழிலை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இப்பகுதியில் உள்ள உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண நிதியாக உப்புத் தொழில் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு நபருக்கு ரூ.5 ஆயிரம் தமிழக அரசு மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல் வழங்கப்படும் மழைக்கால நிவாரண நிதியில் முறைகேடுகள் நடந்து, உண்மையாக உப்பளத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை.

ஆனால் உப்பு தொழிலே என்னவென்று தெரியாதவர்களுக்கு கூட இந்தத் தொகை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இது போன்ற முறைகேடுகள் காரணமாக உண்மையான உப்பு தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுபோல் வழங்கப்படும் பயனாளிகளின் பட்டியலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். இதனால் உண்மையான உப்பு தொழிலாளர்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள் என உப்பள தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post மரக்காணம் பகுதியில் தொடர் மழை பக்கிங்காம் கால்வாய் நீர் புகுந்ததால் உப்பு உற்பத்தி அடியோடு பாதிப்பு: தொழிலாளர்கள் கவலை appeared first on Dinakaran.

Read Entire Article