மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சொந்தமான சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்படும். இந்த பணிகள் முடிந்து ஜனவரி முதல் வாரத்தில் உப்பு உற்பத்தி துவங்கப்படும். அதில் இருந்து செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் வரையில் உப்பு உற்பத்தி தொடர்ந்து நடைபெறும். மரக்காணம் பகுதியில் உப்பு தொழிலே பிரதான தொழிலாக உள்ளது. இதனால் இந்த உப்பள தொழிலை நம்பி இப்பகுதியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 4 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன.
இப்பகுதியில் ஆண்டுதோறும் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுவை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு உணவுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த கனமழையால் உப்பளங்கள் நீரில் மூழ்கி கடல் போல் காட்சியளித்தது. இந்த மழை வெள்ளம் வடிய பல மாதங்கள் ஆகியது. இதன் காரணமாக வழக்கமாக டிசம்பர் மாதம் துவங்கப்படும் முதற்கட்ட பணிகள் ஜனவரி மாத கடைசி வாரத்தில் தான் துவங்கப்பட்டது. இதை தொடர்ந்து உப்பு உற்பத்தி துவங்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக கோடை மழை பெய்தது.
இந்த மழையால் உப்பு உற்பத்தி தடைபட்டது. இதனால் தொடர்ந்து மீண்டும் மழை நீரை வெளியேற்றி உப்பு உற்பத்திக்கான பணிகளை துவங்கினர். இந்நிலையில் தற்போது மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அனல் காற்றுடன் கோடை வெயில் கொளுத்துகிறது. உப்பு உற்பத்திக்கு வெயில் காலம் தான் முக்கியமானதாக இருக்கும். எனவே இந்த கோடை வெயிலால் உப்பு உற்பத்தியும் அமோகமாக நடைபெற்று வருகிறது. 100 கிலோ உள்ள ஒரு உப்பு மூட்டையின் விலை ரூ.450 முதல் ரூ.500 வரையில் விற்பனையாகிறது. இந்த விலை ஏற்றம் மற்றும் உப்பு உற்பத்தி அதிகரிப்பால் காலம் தாழ்ந்து உப்பு உற்பத்தி துவங்கிய நிலையிலும் உப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post மரக்காணத்தில் உப்பு உற்பத்தி அமோகம் appeared first on Dinakaran.