மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் பௌர்ணமி தின திருவிளக்கு வழிபாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு..!!

6 hours ago 3

சென்னை: மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் பௌர்ணமி தின திருவிளக்கு வழிபாட்டை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில் இன்று மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் உள்பட 5 திருக்கோயில்களில் பௌர்ணமி தின 108 திருவிளக்கு வழிபாட்டினை தொடங்கி வைத்தார்.

பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகு, இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் கட்டணமில்லா திருமணங்கள், மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகிய புனித தலங்களுக்கு செல்பவர்களுக்கு அரசு மானியம், மூத்தக் குடிமக்கள் பயன்பெறும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கும், அறுபடை வீடுகளுக்கும், இராமேசுவரத்திலிருந்து காசிக்கும் கட்டணமில்லா ஆன்மிகப் பயணம், நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் மற்றும் ஒருவேளை அன்னதானத் திட்டம் விரிவாக்கம் என பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த அரசு பொறுப்பேற்ற பின், மகளிருக்கு சுய உதவிக் கடன் தள்ளுபடி, மகளிர் உரிமைத்தொகை ரூபாய் ஆயிரம், விடியல் பயணம் என பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்தியது போல் இந்து சமய அறநிலையத்துறையில் சுமங்கலி பெண்களுக்கு பௌர்ணமி தின திருவிளக்கு வழிபாடு, இந்தாண்டிலிருந்து 5 வாரத்திற்கு 10,000 சுமங்கலி பெண்களுக்கு இலவசமாக மங்கலப் பொருட்களை வழங்குகின்ற திட்டம் போன்ற திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.

பௌர்ணமி தின திருவிளக்கு வழிபாடானது தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் 14.06.2022 அன்று 12 திருக்கோயில்களில் தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2023 – 2024 ஆம் ஆண்டில் 5 திருக்கோயில்களுக்கும், 2024 – 2025 ஆம் ஆண்டில் 3 திருக்கோயில்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டு மொத்தம் 20 திருக்கோயில்களில் நடைபெற்று வந்தது. இதன்மூலம் 65,340 பெண்கள் பலனடைந்துள்ளனர். இத்திட்டத்திற்கான செலவில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே, அதாவது ரூ.200 மட்டுமே பெண் பக்தர்களிடமிருந்து பெறப்பட்டு வந்தது.

இதற்கான கட்டணத்தை ரூ.100 ஆக குறைத்திட முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்த கட்டணக் குறைப்பு அடுத்த மாதத்திலிருந்து 25 திருக்கோயில்களிலும் செயல்படுத்தப்படும். இன்றைய தினம் மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், வீரபாண்டி, அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில், மேச்சேரி, அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில், பழனி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர், அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் ஆகிய 5 திருக்கோயில்களில் பௌர்ணமி தின விளக்கு வழிபாடு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து 25 திருக்கோயில்களில் இத்திட்டம் இன்றுமுதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அரசு பொறுப்பேற்றபின், இன்றுவரை 3,297 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. வருகின்ற 13-ஆம் தேதி 28 திருக்கோயில்களுக்கும், 14-ஆம் தேதி திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 46 திருக்கோயில்களுக்கும் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் 3,500 திருக்கோயில்களை எட்டும் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, திருக்கோயில் இணை ஆணையர்/ செயல் அலுவலர் பெ.க.கவெனிதா, திருக்கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் எம்.பி. மருதமுத்து, சி.டி.ஆறுமுகம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் பௌர்ணமி தின திருவிளக்கு வழிபாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு..!! appeared first on Dinakaran.

Read Entire Article