மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் முழு உருவ சிலையை திறந்து வைத்தார்

10 hours ago 2

சீர்காழி, மயிலாடுதுறை, ஜூலை 16: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உங்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் சீர்காழி பகுதிக்கு காரில் வந்தார். முதல்வரின் வருகையையொட்டி அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். பொதுமக்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதல்வர், பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது சீர்காழி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சீர்காழி ரயில் நிலையத்தில் அந்தியோதயா ரயில் நிறுத்த வலியுறுத்தி சீர்காழி கோட்டை ரயில் பயணிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதேபோல் தாடாளன் கோயில் பகுதியில் இஸ்லாமியர்கள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தொடர்ந்து சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் மேளதாளம், குதிரைகள் ஆட்டத்துடன் முதல்வர் கோலாகலமாக வரவேற்கப்பட்டார். வழிநெடுக நின்றிருந்த பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி சென்ற முதல்வர் ஸ்டாலின், சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முன்பு மாணவ மாணவிகள் நின்றிப்பைத கண்ட உடன் காரில் இருந்து இறங்கினார். பின்னர் அருகில் சென்ற அவர், மாணவ மாணவிகளிடம் சிறிது ேநரம் பேசினார். பின்னர் திருவெண்காட்டிற்கு புறப்பட்டு சென்றார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த அவர், மாலை திருவெண்காட்டில் இருந்து புறப்பட்டு செம்பதனிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைத்தார். பின்னர் மயிலாடுதுறை புறப்பட்டு சென்றார்

மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லையான சோதியக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மாவட்ட கலெக்டர் காந்த் வரவேற்றார். மேலும் அமைச்சர்கள், அதிகாரிகள், திமுக முக்கிய பிரமுகர்கள் முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து கொள்ளிடம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் அங்கு புதிதாக அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் வெண்கல உருவ சிலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அருகே புதியதாக அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் திமுக கொடியை ஏற்றினார். அப்போது முதல்வருக்கு கொள்ளிடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் செல்ல சேது ரவிகுமார் செங்கோல் வழங்கினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மெய்யநாதன், கணேசன், மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.

The post மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் முழு உருவ சிலையை திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article