மும்பை: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் விளையாடி வருகிறது.இதில் லீட்சில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தும், பர்மிங்காமில் நடந்த 2வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றிபெற்ற நிலையில், லார்ட்சில் நடந்த 3வதுடெஸ்ட்டில் இந்தியா 22 ரன் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது. ஜடேஜா தனி நபராக போராடியும் வெற்றிபெற முடியவில்லை. இதனிடையே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மான்செஸ்டரில் வரும் 23ம்தேதி தொடங்கும் 4வது டெஸ்ட்டில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுபற்றி கேப்டன் சுப்மன் கில் கூறுகையில், 4வது டெஸ்ட்டில் பும்ரா ஆடுவது பற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும், என்றார். இதனிடையே இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே அளித்துள்ள பேட்டியில், ”நான் இந்திய அணியின் குழுவில் ஒரு பகுதியாக இருந்தால், நிச்சயமாக அடுத்த ஆட்டத்தில் விளையாட பும்ராவை கட்டாயப்படுத்துவேன், ஏனெனில் அடுத்த 2டெஸ்ட்டும் மிக முக்கியமானது. அவர் 4வது டெஸ்ட்டில் விளையாடாமல் தோல்வி அடைந்தால், தொடரை இழந்துவிடுவோம். அவர் 3 டெஸ்ட்டில் மட்டுமே விளையாடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், 4வது டெஸ்ட்டிற்கு ஒருவாரத்திற்கு மேல் ஓய்வு உள்ளது.
நீங்கள் சொந்த மண்ணில் விளையாட தேவையில்லை.நீங்கள் விரும்பினால் ஓய்வு எடுக்கலாம். ஆனால் அடுத்த டெஸ்ட்டில் பும்ரா விளையாட வேண்டும்,” என்றார். மேலும் லார்ட்ஸ் டெஸ்ட்டில் தோல்வி குறித்து பேசிய கும்ப்ளே, இங்கிலாந்து பவுலர்கள் கிறிஸ் வோக்ஸ், சோயிப் பஷீர், ஜோரூட் ஆகியோருக்கு எதிராக ஜடேஜா ரிஸ்க் எடுத்திருக்க வேண்டும்,என்றார்.
பும்ராவை பாராட்டிய சார்லஸ்
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணியினர், லண்டனில் உள்ள கிளாரன்ஸ் மாளிகையில் இங்கிலாந்து 3ம் மன்னர் சார்லஸை நேரில் சந்தித்தனர். மன்னர் சார்லஸ் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் ஒவ்வொருவரிடமும் கைகுலுக்கி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதற்கிடையில், இந்திய வீரர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தும்போது, மன்னர் சார்லஸ் பும்ராவைப் பார்த்து பிரமாதமாக பந்துவீசுவதாக பாராட்டினார்.
பிட்ஸ்.. பிட்ஸ்..
* இந்திய யு 19 கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 5 போட்டி கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 3-2 என கைப்பற்றியது. அடுத்ததாக 4 நாள் கொண்ட 2 டெஸ்ட்டின் முதல் டெஸ்ட்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 540, இங்கிலாந்து 439 ரன் எடுத்தன. 2வது இன்னிங்சில் இந்தியா 248 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் 350 ரன் இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து யு 19 அணி கடைசி நாளான நேற்று 7 விக்கெட் இழப்பிற்கு 270ரன் எடுத்தது. இதனால் போட்டி டிராவில் முடிந்தது. கடைசி டெஸ்ட் வரும் 20ம் தேதி தொடங்குகிறது.
* ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.இதில் 5 போட்டி கொண்ட டி.20 தொடரை முதன்முறையாக 3-2 என கைப்பற்றி சாதனை படைத்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. இதில் முதல் போட்டி சவுத்தாம்டனில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்தபோட்டி சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகிறது. இரு அணிகளும் இதற்கு முன் 76 ஒருநாள் போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 34ல் இந்தியா, 40ல் இங்கிலாந்து வென்றுள்ளன. 2 போட்டி ரத்தாகி உள்ளது.
* வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என இழந்து ஒயிட் வாஷ் ஆனது. இதில் கடைசி டெஸ்ட்டில் 2வது இன்னிங்சில் 27 ரன்னில் சுருண்டது அந்நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தலைவர் கிஷோர் ஷாலோ, கிரிக்கெட் வாரிய அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் முன்னாள் ஜாம்பவான்களான கிளைவ் லாயிட், விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் பிரையன் லாரா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
The post இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட்டில் பும்ரா விளையாட வேண்டும்: அனில் கும்ப்ளே சொல்கிறார் appeared first on Dinakaran.