மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு

2 hours ago 1


மயிலாடுதுறை: துலா மாதம் என்றழைக்கப்படும் ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஐப்பசி 1ம் தேதி தீர்த்தவாரியுடன் துலா உற்சவம் துவங்கி ஐப்பசி 30ம் தேதி கடைமுக தீர்த்தவாரி ஆண்டுதோறும் நடைபெறும். இந்த மாதத்தில் காவிரி துலா கட்டத்தில் கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள் அனைத்தும் புனித நீராடி பாவங்களில் இருந்து விடுபட்டதாக ஐதீகம். இந்தாண்டு துலா மாத தீர்த்தவாரி கடந்த மாதம் 17ம் தேதி துவங்கியது. கடந்த 1ம் தேதி அமாவாசை தீர்த்தவாரி நடந்தது. கடைமுக தீர்த்தவாரி விழா நேற்று நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

இந்நிலையில் இன்று(16ம் தேதி) முடவன் முழுக்கு விழா நடந்தது. முன்பு ஒரு காலத்தில் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஐப்பசி கடைசி நாளில் கடைமுக தீர்த்தவாரி விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு புனித நீராட வெளியூரை சேர்ந்த நடக்க முடியாத பக்தர் ஒருவர் விரும்பினார். ஆனால் அவரால் உரிய நேரத்தில் வர முடியவில்லை. இதனால் மனமுடைந்த அந்த பக்தர் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்தார். அப்போது அவரது முன்பு தோன்றிய சிவபெருமான், உன்னை போன்று கடைமுக தீர்த்தவாரி விழாவில் கலந்து கொள்ள இயலாதவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் துலா கட்டத்தில் புனித நீராடி வழிபட்டால் ஐப்பசி மாதம் 30 நாட்களும் காவிரியில் புனித நீராடிய பலனை பெறுவார்கள் என்று அருளாசி வழங்கியதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி மயிலாடுதுறை துலா கட்டத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத முதல் நாளில் முடவன் முழுக்கு விழா நடந்து வருகிறது. வழக்கம்போல இன்று முடவன் முழுக்கு நடந்தது. அதிகாலை முதலே திரளான பக்தர்கள் துலா கட்ட காவிரியில் புனித நீராடினர். முடவன் முழுக்கையொட்டி காவிரி தாய்க்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 11 மணியளவில் தீர்த்தவாரி நடைபெற்றது.

The post மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு appeared first on Dinakaran.

Read Entire Article