
சென்னை,
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்முட்டி. 'விசா' திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். 'மவுனம் சம்மதம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மேலும், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில், புதுமுக இயக்குனரான டீனோ டென்னிஸ் இயக்கியுள்ள பசூக்கா என்ற படத்தில் மும்முட்டி ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் காயத்ரி ஐயர் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் மிதுன் முகந்தன் இசையமைத்துள்ளார். மேலும், நிமிஷ் ரவி மற்றும் ராபி வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றது. அதனை தொடர்ந்து இப்படம் பிப்ரவரி 14-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்து. ஒரு சில காரணத்தால் அந்த தேதியில் படம் வெளியாகவில்லை. அதனால் தற்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி வெளியாக உள்ளது.